வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2021 1:46 AM IST (Updated: 22 Dec 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராஜாக்கமங்கலம், 
வெள்ளிச்சந்தை அருகே வழி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
டீக்கடை உரிமையாளர்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈசன்தங்கு பகுதியை சேர்ந்தவர் வேலைய்யா (வயது53), தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (50). இவர் தனது வீட்டு முன் டீக்கடை நடத்தி வருகிறார். 
நேற்று காலையில் சாந்தி தனது கடையின் முன் பகுதியில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். 
அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவர் இறங்கி வந்து சாந்தியிடம் குளச்சலுக்கு செல்லும் வழியை கேட்டார். சாந்தியும் அவருக்கு வழியை கூறிக்கொண்டிருந்தார். 
5 பவுன் நகை பறிப்பு
அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் திடீரென சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற கூட்டாளியுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். 
இதுகுறித்து சாந்தி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Next Story