‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புதருக்குள் மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு கிராமத்தின் மெயின் சாலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தினை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் மின்கம்பத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
சுஜிதா, வண்ணாங்குண்டு.
சேறும், சகதியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அழகர்சாமிநகரில் உள்ள தெருக்களில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் இந்த பகுதியில் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. மண் சாலையாக இருப்பதால் இந்த பகுதியில் உள்ள சாலையில் செல்வபர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே தார்ச்சாலை அமைத்து மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பையா, கொல்லங்குடி.
மயான வசதி தேவை
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியம் தாடையம்பட்டி ஊராட்சி மானிபமேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு சரியான மயான வசதி இல்லை. ஆகையால் தாடையம்பட்டியில் இருந்து வண்ணாங்குளம் கண்மாய்க்கு செல்லும் நீரோடையில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்கின்றனர். இதனால் மழை காலங்களில் தகனம் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பையா, மானிபமேட்டுப்பட்டி.
தொற்று நோய் பரவும் அபாயம்
விருதுநகர் மாவட்டம் ஆதிபட்டி கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் கழிவுநீர் அதிக அளவில் தேங்கி சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், ஆதிபட்டி.
சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா குன்னூர் கிராமத்தின் சின்னத்தம்பி கோவில் தெரு அமைந்துள்ள நீர்த்தேக்கத்தொட்டியின் சுவர் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் போதுமான அளவு சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் குடிக்க போதுமான அளவு நீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே நீர்த்தேக்கத்ெதாட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
கனகராஜ், குன்னூர்.
பாதுகாப்பு உபகரணங்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் எண்ணற்ற சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு முககவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும்.
ஸ்டிபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
Related Tags :
Next Story