மலர் கிரீடம் அணிந்து பள்ளியில் ஆய்வு: தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம்


மலர் கிரீடம் அணிந்து பள்ளியில் ஆய்வு: தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி இடமாற்றம்
x
தினத்தந்தி 22 Dec 2021 2:17 AM IST (Updated: 22 Dec 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

தலையில் மலர் கிரீடம் அணிந்து பள்ளியில் ஆய்வு செய்த தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தென்காசி:
தலையில் மலர் கிரீடம் அணிந்து பள்ளியில் ஆய்வு செய்த தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

மலர் கிரீடம் அணிந்து ஆய்வு
தென்காசி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் சுடலை. இவர் கடையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்ய சென்றார். அப்போது, அவருக்கு பள்ளிக்கூடம் சார்பில் மலர் கிரீடம் அணிவித்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து அவர் அந்த மலர் கிரீடத்தை அகற்றாமல் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து கோப்புகளை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதை சிலர் செல்போனில் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

இடமாற்றம்
இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி சுடலை நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்ட அதிகாரியாக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட கல்வி அதிகாரியாக (பொறுப்பு) செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை நேற்று கல்வித்துறை சென்னை ஆணையாளர் நந்தகுமார் பிறப்பித்து உள்ளார்.

Next Story