வேலை தேடுபவர்கள் சிறு தொழில் தொடங்க முன்வர வேண்டும் கலெக்டர் கார்மேகம் அறிவுரை


வேலை தேடுபவர்கள் சிறு தொழில் தொடங்க முன்வர வேண்டும் கலெக்டர் கார்மேகம் அறிவுரை
x

வேலை தேடுபவர்கள் சிறு தொழில் தொடங்க முன்வரவேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

சேலம்,
தொழில் முனைவோர்கண்காட்சி
கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் சேலம் வாசவி மகாலில் தொழில் முனைவோர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.220 கோடி மதிப்பில் கதர் ரகங்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பும் உருவாக்கப்படுகிறது.
இதில் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் பல்வேறு தொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
கடன் உதவிகள்
கடன் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும், கடன் தொகையில் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வேலை தேடுபவர்கள், ஏதாவது ஒரு சிறு தொழிலை தொடங்க முன்வர வேண்டும். 
புதிதாக தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தை அணுக வேண்டும். மேலும் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில் வாரியம் மற்றும் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் மூலம் மானியத்துடன் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். 
இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய உதவி இயக்குனர் சித்ரா மதன், முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, கதர் வாரிய உதவி இயக்குனர் ரூபி அலிமா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்க விழா முடிவில், சர்க்கார் கொல்லப்பட்டி கிராம சேவா சங்கத்தின் செயலாளர் ஆர்.அருணா நன்றி கூறினார்.
தொழில் முனைவோர் கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story