ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபர் கைது
தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், சென்னை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ஆகியோர் திருவள்ளூரை அடுத்த திருத்தணி அரசு ஆஸ்பத்திரி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தியதாக திருவள்ளூரை அடுத்த திருத்தணி அருங்குளம் மேட்டுத்தெருவை சேர்ந்த சரவணன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story