நாகை மாவட்டத்தில் காணாமல் போன 75 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
நாகை மாவட்டத்தில் காணாமல் போன 75 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நாகப்பட்டினம்:-
நாகை மாவட்டத்தில் காணாமல் போன 75 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
காணாமல் போன செல்போன்கள்
நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. இந்த புகார்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன், ஏட்டு முருகதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
உரியவர்களிடம் ஒப்படைப்பு
இதில் மாவட்டம் முழுவதும் காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்தனர். இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி, மீட்கப்பட்ட 75 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது செல்போன்களை கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு கூறியதாவது:-
திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி சிம் கார்டு போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது தெரிந்தால் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
வங்கி கணக்கு எண், கடவுச்சொல் போன்ற விவரங்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. வளர்ந்துவரும், தொழில்நுட்பங்களை பொதுமக்கள் கவனமாகவும், விழிப்புணர்வுடனும் கையாள வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story