340 இலங்கை தமிழர் குடும்பத்தினர் வாழ்க்கை தரம் உயர நடவடிக்கை


340 இலங்கை தமிழர் குடும்பத்தினர் வாழ்க்கை தரம் உயர நடவடிக்கை
x

340 இலங்கை தமிழர் குடும்பத்தினர் வாழ்க்கை தரம் உயர நடவடிக்கை

கிருஷ்ணகிரி:
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 340 இலங்கை தமிழர் குடும்பத்தினர் வாழ்க்கை தரம் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இலங்கை அகதிகள் முகாம் தற்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணை பகுதியில் 184 குடும்பங்களும், ஓசூர் தாலுகா கெலவரப்பள்ளி அணை பகுதியில் 156 குடும்பங்களும் என மாவட்டத்தில் 340 குடும்பத்தினர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருகிறார்கள்.
நல உதவிகள்
இதில் பாம்பாறு அணை பகுதியில் வசிக்கும் 184 குடும்பங்களை சேர்ந்த 573 பேருக்கு மாதந்தோறும் ரூ.6 லட்சத்து 27 ஆயிரத்து 470 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 6 ஆயிரத்து 624 கிலோ அரிசியும், 270 கிலோ சர்க்கரையும் வழங்கப்படுகிறது. முகாமில் வசித்து வரும் 63 முதியவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது. அங்கு 5 மகளிர் குழுக்கள் இயங்கி வருகிறது.
இங்கு வசிக்க கூடிய 573 பேருக்கு ரூ.9 லட்சத்து 8 ஆயிரத்து 535 மதிப்பில் நல உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். மேலும் 37 பேருக்கு ரூ.1 கோடியே 11 லடசம் மதிப்பில் வீடுகள் கட்டி தரப்படும் என்றும் அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
கெலவரப்பள்ளி அணை
கெலவரப்பள்ளி அணை பகுதியில் 156 குடும்பங்களை சேர்ந்த 527 பேர் வசிக்கிறார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 லட்சத்து 48 ஆயிரத்து 670 வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 5 ஆயிரத்து 800 கிலோ அரிசியும், 240 கிலோ சர்க்கரையும் வழங்கப்படுகிறது. 43 முதியவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்க கூடிய 340 குடும்பத்தினரின் வாழ்க்கை தரம் உயர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story