நிலச்சரிவை தடுக்க நீலகிரியில் புதிய தொழில்நுட்ப திட்டம்
நிலச்சரிவை தடுக்க நீலகிரியில் புதிய தொழில்நுட்ப திட்டம்
ஊட்டி
தமிழகத்தில் முதல் முறையாக நிலச்சரிவை தடுக்க நீலகிரியில் புதிய தொழில்நுட்ப திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
நிலச்சரிவு மேலாண்மை
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்க புதிய தொழில்நுட்பம் மூலம் சணல் வலை, நீர் விதைப்பு முறை, ஜியோ கிரிட் மூலம் மண் உறுதி தன்மையை அதிகரித்து புற்கள் வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக ஊட்டி-கோத்தகிரி சாலை கோடப்பமந்து பகுதியில் புதிய தொழில்நுட்ப திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க புதிய தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்ற புகைப்படங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதிக்கப்படும் இடங்கள்
தமிழ்நாடு மாநில பேரிடர் துறை மூலம் 4,170 இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ளது. நீலகிரியில் இயற்கை பேரிடரால் 284 இடங்கள் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டது. இதில் நெடுஞ்சாலை துறையில் 49 இடங்கள் ஆகும்.
காலநிலை மாற்றத்தால் அதிகமாக மழைப்பொழிந்து மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படுகிறது. நிலச்சரிவு மேலாண்மை அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில்நுட்ப முறைகளான சணல் வலை அமைப்பது, ஹைட்ரோ சீடிங் எனப்படும் நீர் விதைப்பு முறை மேற்கொள்ளப்படுகிறது.
தொழில்நுட்ப முறைகள்
மேலும் மண் ஆணி (கம்பி) அமைத்து, அதன் வழியாக சிமெண்ட் கலவை செலுத்தப்படுகிறது. ஜியோ கிரிட் மூலம் மண் உறுதி தன்மையை அதிகரித்து புற்கள் வளர்வதற்காக விதைகள் தெளிக்கப்படுகிறது. புற்கள் அடர்த்தியாக வளர்ந்து மண்ணை கெட்டியாக பிடித்துக் கொள்ளும். மேலும் அடிப்பகுதியில் கற்கள் வைத்து, அதன் மேல் வேலி துருப்பிடிக்காத வகையில் அமைக்கப்படுகிறது.
மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் இந்த திட்டம் ஊட்டி-கோத்தகிரி சாலை கோடப்பமந்து, பாக்கியநகர் ஆகிய 2 இடங்களில் தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது. மண் வலிமையை உறுதி செய்யவும், சரிவை தடுக்கவும் ஜியோ கிரிட் மூலம் மண் ஸ்திரத் தன்மை அதிகப்படுத்தபடுகிறது. இதன் பயன்பாடு வெற்றி பெற்றால் நீலகிரியில் 284 பகுதிகள் மற்றும் ஏற்காடு, கொடைக்கானல், போடிமெட்டு ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படும்.
செலவினம் குறைகிறது
மண்சரிவை தடுக்க தடுப்புச் சுவர் அமைக்கும் போது, ஒரு கட்டத்தில் மண் உறுதி தன்மையை இழந்து இடிந்து விடுகிறது. தடுப்புச்சுவர் கட்டும் செலவில் புதிய தொழில்நுட்ப உதவியுடன் நிலச்சரிவை தடுக்க 50 சதவீதம் மட்டும் செலவாகிறது. இதன் மூலம் நிரந்தர உறுதித்தன்மை உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கோத்தகிரி சாலை கொண்டை ஊசி வளைவுகளில் 2 இடங் களில் விபத்துக்களை தடுக்க நவீன சென்சார் கருவிகள் தொடங்கி வைக்கப் பட்டது. தொட்டபெட்டா சந்திப்பு அருகே அமைச்சர் எ.வ.வேலு சோலை மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து தும்மனட்டி பிரிவு வரை 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் எஸ்.பி.அம்ரித், மாநில நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் சந்திரசேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் பாலமுருகன், கோவை கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், நீலகிரி கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story