தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Dec 2021 9:51 PM IST (Updated: 22 Dec 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பையால் நோய் பரவும் அபாயம்

பாளையங்கோட்டை மகாராஜநகர் அருகே உள்ள சீனிவாசகம் நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இந்த குப்பைகள் பல நாட்களாக அல்லப்படாமல் இருப்பதால், அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் அருகில் பிள்ளையார் கோவிலும் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன், சீனிவாசகம்நகர்.

ஓடை தூர்வாரப்படுமா?

நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி பஞ்சாயத்து மகாதேவன் தெரு பின்புறம் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அதில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆறுமுகம், நாங்குநேரி.

தார்சாலை அமைக்க வேண்டும் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுப்புலாபுரம் அருகே சங்கரலிங்கம்புரம் கிராமத்தில் கரிசல்குளம் செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. சிறிய அளவில் மழை பெய்தால்கூட அந்த பகுதி சேறும், சகதியுமான காட்சி அளிக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த பகுதி மோசமாக உள்ளது. இதனால் அங்கு வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் தாா்சாலை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெய்ஸ்ரீ, சுப்புலாபுரம்.

வீடுகளை சூழ்ந்த கழிவுநீர்

சங்கரன்கோவில் நகரசபை 30-வது வார்டு முல்லை நகர் பிளாக்-ஏ3 பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிவுநீர் கால்வாய் சீராக அமைக்கப்படாததால் கழிவுநீர் வெளியேறி அந்த பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சங்கர் ஆனந்த், சங்கரன்கோவில்.

பன்றிகள் தொல்லை

ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி கல்யாணிபுரம் பகுதியில் 1 முதல் 4 தெருக்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றது. 
மேலும், ெதருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் பன்றிகள் விழுந்து புரண்டு அழைந்து திரிவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த பன்றிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
திருக்குமரன், கடையம்.

உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?

செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றது. மேலும் தற்போது சபரிமலை சீசன் என்பதால் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை முன்பு உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இவை முழுமையாக எரிவது இல்லை. மேலும், கடந்த சில வாரங்களாக ஒரே ஒரு மின்விளக்கு மட்டுேம எரிகிறது. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி அனைத்து மின்விளக்குகளை எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரத்தில் இருந்து பொட்டல்புதூர் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை கடந்த 3 மாதங்களாக குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விழுந்து காயம் அடைகிறார்கள். அந்த சாைலயை சீரமைக்க அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா?
கோதர் மைதீன், முதலியார்பட்டி.

பயணிகள் நிழற்கூடத்தில் இருக்கை சரிசெய்யப்படுமா? 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரும்பூரில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் இரும்பு இருக்கைகள் உடைந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அதில் அமர முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. இந்த இருக்கைகளை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தர், புன்னையடி.

பழுதடைந்த அடிபம்பு 

ஸ்ரீவைகுண்டம் சிவகாமி அம்மன் கோவில் முன்பு உள்ள அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து கீழே விழும் நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இந்த அடிபம்பை சரிசெய்து கொடுக்க வேண்டுகிறேன்.
சித்திரை வேல், ஸ்ரீவைகுண்டம்.

Next Story