கட்டிட மேற்பார்வையாளர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரம் ‘அபேஸ்’


கட்டிட மேற்பார்வையாளர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரம் ‘அபேஸ்’
x
தினத்தந்தி 22 Dec 2021 9:58 PM IST (Updated: 22 Dec 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

வங்கிக்கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரம் ‘அபேஸ்’

வேலூர்

காட்பாடி அருகே உள்ள வடுகந்தாங்கல் கீழ்விளாச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுராஜ் (வயது 45). கட்டிட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நண்பர் ஒருவர், இவருக்கு கூரியர் அனுப்பி உள்ளார். அது, குறிப்பிட்ட காலத்துக்குள் வந்து சேரவில்லை. இதனால் அனுராஜ் கூகுளில் வாடிக்கையாளர் சேவை மையம் குறித்துத் தேடினார். அதில் ஒரு செல்போன் எண் கொடுக்கப்பட்டு இருந்தது.

அந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டார். அதில் பேசிய மர்மநபர் ஒருவர், மொபைல் ஆப் (செயலி) லிங்கில் சென்று அதில் முகவரி, வங்கி விவரங்களை பூர்த்தி செய்யும்படி கூறினார். அதனை நம்பிய அனுராஜ் மர்மநபர் அனுப்பிய இணையதள முகவரியில் அவரது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தார். மேலும் அவரது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் மர்மநபருக்கு தெரிவித்தார். அதை பயன்படுத்தி மர்மநபர் அனுராஜ் வங்கி கணக்கில் இருந்து 74 ஆயிரத்து 542 ரூபாயை பல்வேறு தவணைகளாக எடுத்து அபேஸ் செய்தார்.

அப்போது தான் தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அவர் அறிந்தார். பின்னர் இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story