தாறுமாறாக ஓடிய கார் மோதி லாரி டிரைவர் பலி
வேடசந்தூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்:
தாறுமாறாக ஓடிய கார்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தூங்கணாம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அஜித் (வயது 23). அவருடைய நண்பர் தனபால் (22). இவர்கள் 2 பேரும் ஒட்டன்சத்திரம் நோக்கி காரில் சென்றனர். காரை அஜித் ஓட்டினார்.
வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரம் நால்ரோடு என்னுமிடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, புதுக்கோட்டையை சேர்ந்த சூர்யா (23) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் மறுபக்கம் சென்றது. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த விபத்தில், 5 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து கார் மோதியது.
மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல்
இந்த விபத்தில் சாலையின் மறுபக்கத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த உலகநாதன் (40), முருநெல்லிக்கோட்டையை சேர்ந்த லாரி டிரைவர் மூர்த்தி (55), வேடசந்தூரை சேர்ந்த வீரப்பன் (55), அத்திக்கோம்பையை சேர்ந்த நிவேதா (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் சாலையோரத்தில் இருந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டி கடையையும் இடித்து தள்ளி விட்டு சிறிது தூரம் சென்று கார் நின்றது. இந்த காட்சியை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர்.
பரிதாப சாவு
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான ேபாலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரில் சென்ற அஜித், தனபால் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம், வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story