ராமேசுவரம் அருகே உண்ணாவிரதம்


ராமேசுவரம் அருகே உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 22 Dec 2021 10:31 PM IST (Updated: 22 Dec 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படை சிறைபிடித்த 68 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

ராமேசுவரம், 
இலங்கை கடற்படை சிறைபிடித்த 68 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர். 
68 மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற 8 விசைப்படகுகள் மற்றும் 55 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று, அந்நாட்டு சிறையில் அடைத்தனர். 
இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்தது.
இந்த நிலையில் ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை மீனவர்கள் 68 பேரையும், 8 படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடு்க்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஏராளமானோர் பங்கேற்பு
நேற்று காலை 9 மணிக்கு இந்த உண்ணாவிரதம் தொடங்கியது. அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா தலைமை தாங்கினார். 
விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் போஸ், அந்தோணி, சகாயம், இருதயம் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாரிராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமான மீனவர்கள், மீனவ பெண்கள் கலந்துகொண்டனர். 
கலெக்டர் பேச்சுவார்த்தை
உண்ணாவிரத போராட்ட பந்தலில் திரண்டிருந்தவர்கள், 68 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையை கண்டித்தும் கோஷமிட்டனர்.  
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை மதியம் 1 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால்குமாவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர். 
அப்போது கலெக்டர் கூறும்போது, மீனவர்களையும், படகுகளையும் மீட்க தமிழக அரசு மத்திய அரசு மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் விடுவிக்கப்படுவார்கள். எனவே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதிகாரப்பூர்வ தகவல்
அப்போது மீனவர்கள், “எங்களிடம் நேரில் வந்து பேசியதற்கு மிகுந்த நன்றி. அரசு நடவடிக்கை எடுத்து வருவது மகிழ்ச்சி என்றாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அரசு மூலம் தகவல் வரட்டும். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்”, என தெரிவித்தனர்.
இதையடுத்து கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மாலை 5 மணிக்கு மீனவர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றனர். 
இந்த போராட்டத்தையொட்டி ராமேசுவரம் முதல் பாம்பன் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  பாம்பன் ரோடு பாலத்திலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story