உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அபாய குழிகள் ஏற்பட்டிருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அபாய குழிகள் ஏற்பட்டிருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
உடுமலை,
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அபாய குழிகள் ஏற்பட்டிருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கழிவுநீர்
உடுமலை மத்திய பஸ்நிலையத்திற்குள் தினசரிஅரசு போக்குவரத்துக் கழக பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 100-க்கும் மேற்பட்டவை வந்துசெல்கின்றன. இதுதவிர வெளியூர்களில் இருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில் மத்திய பஸ்நிலைய வளாகத்தில் ஓடுதளத்தின் நடுப்பகுதியில், பஸ்கள் நிறுத்துமிடத்தில் கழிவுநீர் வடிகாலின் மேல்பகுதி உடைந்து சேதமடைந்துள்ளதால் 2 இடங்களில் திறந்த நிலையில் பெரிய குழியாக உள்ளது. அந்த 2 குழிகளும் திறந்த நிலையில் இருப்பதால் பஸ்சுக்காக அவசர அவசரமாக செல்லும் பயணிகள் அந்த குழிபகுதிக்குள் கால் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் சில நேரங்களில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளில் இருந்து இந்த வடிகாலில் செல்லும் கழிவு நீர், வடிகாலில் ஏற்படும் அடைப்புகளால், திறந்த நிலையில் உள்ள இந்த குழிகளின் வழியாக வெளியேறி அங்கு ஓடுதள பகுதியில் பரவலாக ஓடுகிறது. அப்படிப்பட்ட நேரங்களில் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுவதால், பயணிகள் மூக்கைப்பிடித்துக்கொண்டும், பரவிநிற்கும் கழிவு நீரை மிதித்தபடியும் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.
பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் அந்த குழிகளால் பெரிய விபத்து ஏற்படக்கூடிய நிலையில் அந்த குழிகள் இருப்பதாகக்கூறப்படுகிறது. அத்துடன் அந்த இடத்தில் பஸ்கள் வரும்போது டயர்கள் அந்த குழிக்குள் சிக்கி கொள்கின்றன.
துர்நாற்றம்
அதனால் அந்த குழிகளின் மேல்பகுதியை சிலாப்புகள் வைத்து மூடி, மராமத்து பணிகளை செய்யவேண்டும் என்று பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்த வடிகாலின் கடைசி பகுதியில் அடைப்புகளை நீக்குவதற்காக சிலாப்புகள், நகராட்சி துப்புரவுப்பணியாளர்களால் அகற்றப்பட்டு, அங்கு வடிகாலில் அடைத்திருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. ஆனால் இந்த பணிக்காக அங்கு பயணிகள் உட்காரும் நிழற்குடை பகுதிக்கு அருகில் கழிவுநீர் வடிகாலின் மேற்பகுதியில் இருந்து அகற்றப்பட்ட சிலாப் கற்களை மீண்டும் அந்த இடத்தில் வைத்து மூடாமல் அந்த இடத்திலும் கழிவுநீர் வடிகால் திறந்த நிலையில் உள்ளது. அதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இந்த பகுதியில் சுகாதாரம் இல்லாத நிலை நிலவுகிறது. அங்கும் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story