‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
செம்பட்டி பஸ் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் அருகே காலை நேரத்தில் சரக்கு வாகனங்கள் உள்பட சில வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
-சங்கிலி மகாராஜன், செம்பட்டி.
சாலை பணி நிறுத்தம்
போடி 10-வது வார்டில் 2 மற்றும் 3-வது தெருக்களில் பேவர்பிளாக் கற்களால் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கிடையே சாலை பணியை திடீரென நிறுத்தி விட்டனர். தெருவில் பாதி சாலை அமைத்தும், மீதமுள்ள பகுதி பள்ளம் மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.
-மணிவேல், போடி.
குப்பைகள் எரிப்பு
வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் புகை சாலை முழுவதும் பரவுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் சிரமப்படுகின்றனர். மேலும் காற்று மாசடைகிறது. எனவே குப்பைகளை எரிக்காமல் அள்ளி செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரோஜாபிரியன், வேடசந்தூர்.
சாலையோரத்தில் கிணறு
சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூர் அருகே கொத்தபுளிப்பட்டியில் இருந்து பொம்மநாதபுரம் செல்லும் சாலையில் ஒரு வளைவான இடத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. அந்த பகுதியில் சாலை ஓரத்திலோ அல்லது கிணற்றுக்கோ தடுப்புச்சுவர் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
-பாலசுப்பிரமணி, கொத்தபுளிப்பட்டி.
புகையால் மக்கள் அவதி
திண்டுக்கல் அருகே பெரிய பள்ளப்பட்டியில் குப்பைகள், கழிவுகளை மொத்தமாக தீவைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் கரும்புகை காற்றில் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பரவுகிறது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
-செந்தில்வேல், பெரியபள்ளப்பட்டி.
Related Tags :
Next Story