நெய்வேலியில் ஐடிஐ பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் உண்ணாவிரத போராட்டம்


நெய்வேலியில் ஐடிஐ பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2021 11:04 PM IST (Updated: 22 Dec 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி.ஐ. பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் 211 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் ஐ.டி.ஐ. அப்ரண்டிஸ் எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு கடந்த காலங்களில் என்.எல்.சி. நிறுவனத்தின் பணி ஓய்வு பெற்றவர்களின் காலி பணியிடங்களில் வேலை வழங்க வேண்டும், 2018-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் என்.எல்.சி. நிர்வாக போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்த என்.எல்.சி. நிறுவன தலைவர், ஐ.டி.ஐ. பழகுனர் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.டி.ஐ. பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஐ.டி.ஐ.பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

211 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் அங்கு விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 211 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வட்டம் 27 மற்றும் 29-ல் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். 
அப்போது தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர போவதாக கூறி மதிய உணவு சாப்பிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story