காட்டு பன்றியால் விளைநிலங்கள் சேதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு


காட்டு பன்றியால் விளைநிலங்கள் சேதம் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Dec 2021 12:20 AM IST (Updated: 23 Dec 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

காட்டு பன்றியால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுகிறது என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

நாகர்கோவில், 
காட்டு பன்றியால் விளைநிலங்கள் சேதப்படுத்தப்படுகிறது என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சத்யஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்று கொண்டார். இதை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-
காட்டு பன்றிகள்
குமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்களில் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் வன         பாதுகாப்பு சட்டம், தனியார் பாதுகாப்பு சட்டம், புலிகள் சரணாலயம் என பல்வேறு காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பயிர்களையும், விவசாய நிலங்களையும் காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. கேரளாவில் காட்டு பன்றிகளை சுட்டு கொல்வதற்கு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதே போல குமரி மாவட்டத்திலும் வனத்துறையினரின் அனுமதி பெற்று காட்டு பன்றிகளை கொல்ல சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும் காட்டு பன்றிகளுக்கு இணையாக குரங்குகள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. 
குளத்தை                                      கையகப்படுத்தக்கூடாது
எனவே குரங்குகள் தொல்லையையும் கட்டுப்படுத்த வேண்டும். மணவாளக்குறிச்சி பெரிய குளத்தை வனத்துறையினர் கையகப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் இந்த குளத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. எனவே குளத்தை கையகப்படுத்தும் முயற்சியை வனத்துறை கைவிட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தேரி நெடுங்குளத்தில் உள்ள ஒரு ஷட்டர் உடைந்துள்ளது. இதனால் தண்ணீர்            வீணாகி வருகி றது. ஷட்டரை சரி செய்யாவிட்டால் 400 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கலெக்டர் பதில்
இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் சேதமடைந்த நெல் பயிர்கள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் 96 ஹெக்டரும், வாழை 76 ஹெக்டரும், மரவள்ளிக்கிழங்கு உள்பட மற்ற பயிர்கள் 17 ஹெக்டரும் சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் நிவாரணம் வழங்கப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் அளவீடு பணி நடந்து வருகிறது. மேலும் பல இடங்களில் அளவீடு பணிகள் முடிந்துள்ளன. பழையாற்று கால்வாயில் தற்போது வரை முடிவடைந்துள்ள அளவீட்டின்படி கரை பகுதியை ஆக்கிரமித்து சுமார் 750 தென்னை மரங்கள் உள்ளன. மேலும் 40 இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story