சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்


சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2021 5:42 PM GMT (Updated: 24 Dec 2021 5:42 PM GMT)

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிப்காட் தொழிற்பேட்டை
தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஏற்கனவே அரசு நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட 1,733 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதலாக 1000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, ஜீவா நகர், ஜாகிர் உள்ளிட்ட சில பகுதிகளில் விவசாய சாகுபடி நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த நெல், கரும்பு, மஞ்சள், வாழை, துவரை உள்ளிட்ட பயிர்களுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 மனு
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் இளம்பரிதி, அன்பு, ஜெயராமன், பெருமாள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். அப்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என்று இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கோஷம் எழுப்பினார்கள். போராட்டத்தின் முடிவில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.

Next Story