மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி - வாகனத்தை ஓட்டிய சிறுவன், அனுமதி அளித்த தந்தை மீது வழக்கு


மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி - வாகனத்தை ஓட்டிய சிறுவன், அனுமதி அளித்த தந்தை மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Dec 2021 12:26 AM GMT (Updated: 25 Dec 2021 12:26 AM GMT)

மணப்பாக்கத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். வாகனத்தை ஓட்டிய சிறுவன், அதற்கு அனுமதி அளித்த தந்தை ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் பட்ரிக் முரே. இவருடைய மனைவி சலினா முரே (வயது 52). இவர், கடந்த 21-ந் தேதி மணப்பாக்கத்தில் உள்ள தோவலயத்துக்கு பிளஸ்-2 படிக்கும் தனது 17 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பிரார்த்தனை முடிந்து இரவில் வீட்டுக்கு திரும்பினர்.

மணப்பாக்கத்தில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் சென்றபோது, தவறான பாதையில் எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சலினா முரே, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை-மகன் மீது வழக்கு

இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து எதிரே வந்து மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போரூரை சேர்ந்த கலைச்செல்வன் (62) என்பவரை கைது செய்தனர்.

மேலும் சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் குமாரவேல், பரங்கிமலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் இதை கட்டுப்படுத்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் ேமாட்டார்சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மீதும், அவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து ஓட்ட அனுமதித்ததாக அவனது தந்தை பட்ரிக் முரே மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர் சாவு

அதேபோல் சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் ஹரிகரன் (16). பிளஸ்-2 படித்து வந்தார். இவர், கடந்த 18-ந் தேதி அதிகாலை தனது தந்தையின் புல்லட் வாகனத்தை எடுத்துக்கொண்டு ராமாபுரம் பூந்தமல்லி சாலையில் வந்தபோது எதிரே வந்த வாகனத்தில் இடிக்காமல் இருக்க திடீர் பிரேக் போட்டார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிகரன், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்தாக அவனது தந்தை ராமகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story