ஊருணியில் தண்ணீர் எடுத்து பயிருக்கு பாய்ச்சும் விவசாயிகள்


ஊருணியில் தண்ணீர் எடுத்து பயிருக்கு பாய்ச்சும் விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Dec 2021 11:48 AM GMT (Updated: 25 Dec 2021 11:48 AM GMT)

உச்சிப்புளி அருகே நெற்பயிர்களுக்கு ஊருணியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.

பனைக்குளம், 
 உச்சிப்புளி அருகே நெற்பயிர்களுக்கு ஊருணியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.
பருவ மழை
 ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவ மழை நன்கு பெய்தது. ஆனால் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டுமே நல்ல மழை பெய்துள்ள நிலையில் பல ஊர்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிக குறைவாகவே பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, கடுக் காய் வலசை, சூரங்காட்டுவலசை, மானாங்குடி, நொச்சி யூரணி உள்ளிட்ட பல ஊர்களிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாய நிலங் களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வளர்வதற்கு தண்ணீர் இல்லாமல் நெற் பயிர்கள் அனைத்தும் வாடிய நிலையிலும் முதிர்ச்சி இல்லாத நிலையிலும் காட்சி அளித்து வருகின்றன. இதையடுத்து உச்சிப்புளி அருகே மானாங்குடி, சூரங் காட்டுவலசை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நெற் பயிர்களுக்கு ஊருணியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து  நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
இதுபற்றி மானங்குடியைச் சேர்ந்த விவசாயி அசோகன் கூறியதாவது:- கடந்த 3 ஆண்டுகளாக எதிர்பார்த்ததை விட அதிகஅளவு மழை பெய்தது. நெற் பயிர்களும் நல்ல மழையால் செழிப்பாக வளர்ந்தன. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து தொடக்கத்தில் நல்ல மழை பெய்த நிலையிலும் கடந்த சில வாரங்களாகவே முழுமையாக மழை பெய்யவில்லை.
ஓரளவு மழை
 இதனால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் செடிகள் வாடிப்போய் கிடக்கின்றன. அதிலும் ஓரளவு வளர்ந்த பயிர்களில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் சரியான வளர்ச்சி இல்லாமல் காய்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றன.
மானாங்குடி பகுதியில் உள்ள நெற் பயிர்களுக்கு சூரங்காட்டு வலசை ஊருணியில் இருந்து மோட்டார் வைத்து குழாய் மூலம் விவசாய நிலங்களில் நெற் பயிர்களில் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். ஓரளவு மழை பெய்தால் மட்டுமே தான் இந்த பகுதியை சுற்றி பல கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் விவசாயம் காப்பாற்றப்படும். இல்லை என்றால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய் விடும் நிலைதான் ஏற்படும். 
இவ்வாறு அவர்  கூறினார்.

Next Story