முதியோர் உதவி எண்ணுக்கு வந்த 17 புகார்கள் மீது வழக்குப்பதிவு போலீசார் நடவடிக்கை


முதியோர் உதவி எண்ணுக்கு வந்த 17 புகார்கள் மீது வழக்குப்பதிவு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2021 5:11 PM GMT (Updated: 2021-12-25T22:46:33+05:30)

முதியோர் உதவி எண்ணுக்கு வந்த 17 புகார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கடலூர்,

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பெண்களின் நலன் காக்க லேடீஸ் பஸ்ட் 8220006082. முதி யோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் 82200 09557 என்ற புதிய காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தினார். 

இந்த உதவி எண்ணுக்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி ஹலோ சீனியர் என்ற உதவி எண்ணில் இது வரை 175 புகார்கள் பதிவாகி உள்ள நிலையில் 17 புகார் களுக்கு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 48 புகார்களுக்கு சி.எஸ்.ஆர். பதிவு செய்யப் பட்டுள்ளது.

பல்வேறு புகார்களுக்கு தீர்வு

கடலூர் முதுநகரை சேர்ந்த சந்திரா (வயது 72) என்பவர் ஹலோ சீனியர் எண்ணில் தொடர்பு கொண்டு பக்கத்து வீட்டில் இருந்து மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தனது வீட்டிற்குள் வருவதாகவும், அதை சரி செய்ய சொல்லி புகார் தெரிவித்தார்.

 இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பக்கத்து வீட்டை சேர்ந்த நபரிடம் விசாரித்து சரி செய்தனர்.

குள்ளஞ்சாவடி கிருஷ்ணங்குப்பத்தை சேர்ந்த மெடில்டா மேரி தனது தந்தை அந்தோணிசாமியை அண்ணன் அடித்து கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவித்தார். 

தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். இது போன்ற பல்வேறு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Next Story