தஞ்சையில், ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் மண்ணை குத்துதல், நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது


தஞ்சையில், ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் மண்ணை குத்துதல், நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 26 Dec 2021 6:34 PM GMT (Updated: 26 Dec 2021 6:34 PM GMT)

தஞ்சையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார்படுத்தும் வகையில் அவைகளுக்கு மண்ணை குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்:-

தஞ்சையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார்படுத்தும் வகையில் அவைகளுக்கு மண்ணை குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது வீரவிளையாட்டு. தை மாதம் நெருங்கிவிட்டால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை தயார்படுத்த தொடங்கி விடுவார்கள். களத்தில் இறங்கி அந்த காளைகளை அடக்க காளையர்களும் தயாராவார்கள்.
2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தனி மவுசு ஏற்பட்டு உள்ளது. 

பிரத்யேக பயிற்சிகள்

இதனால் காளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஜல்லிக்கட்டு காளைகளின் மதிப்பு உயர்ந்து, பல லட்ச ரூபாய்க்கு காளைகள் கை மாறுகின்றன. காளைகளை அடக்கும் வீரர்களின் எண்ணிக்கையும்  அதிகரித்துவிட்டது. ஜல்லிக்கட்டு தொடங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் காளைகளுக்கு இளைஞர்கள் பிரத்யேக பயிற்சிகளை அளிக்க தொடங்கிவிட்டனர்.

நீச்சல்

தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் பகுதியில் இளைஞர்கள் காளையை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட தாக்கத்தால் பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் காளைகளை வாங்கி அதற்கு பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் தமிழகத்தில் தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள செய்து பரிசுகளை குவித்து வருகிறார்.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைக்கு வெண்ணாற்றில் நீச்சல் பயிற்சி, மண்ணை குத்தி கிளறுதல், ஓட்டப்பயிற்சி, காளைகளை சீண்டி கோபப்பட வைப்பது போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறார்கள்.
மேலும் வழக்கமாக அளிக்கப்படும் உணவு தவிர பச்சரிசி, சோளமாவு, கோதுமை தவிடு, துவரம் பருப்பு ஆகியவற்றை கொடுத்து காளைக்கு ஊட்டம் அளித்து வருகின்றனர்.

போராட்டம்

இதுகுறித்து சதீஷ் கூறியதாவது:-
 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதில் இருந்து அதன் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் காளை மாடுகளை வாங்கி வளர்க்க தொடங்கினோம்.  இதற்கு முன்பு கட்டைக்காரி வகை ஜல்லிக்கட்டு காளை வளர்த்து பல வாடிவாசல்களில் அவிழ்த்து விட்டோம். அது எங்களுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. தற்போது திண்டுக்கல்லில் இருந்து புலிக்குளம் வகை ஜல்லிக்கட்டு காளையை வாங்கி அதற்கு தினமும் பயிற்சி அளித்து வருகிறோம். இந்த காளையும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று எங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியை எக்காரணத்தை கொண்டும் நிறுத்தக்கூடாது. உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்றார்.

Next Story