புதூர், கரிமேடு பகுதியில் காய்கறி, இறைச்சி மார்க்கெட்டுகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை


புதூர், கரிமேடு பகுதியில் காய்கறி, இறைச்சி மார்க்கெட்டுகளில்  அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 26 Dec 2021 7:33 PM GMT (Updated: 2021-12-27T01:03:26+05:30)

மதுரை புதூர், கரிமேடு பகுதியில் உள்ள காய்கறி, இறைச்சி மார்க்கெட்டுகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். முறைகேடான மின்னணு தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்தனர்.

மதுரை, 

மதுரை புதூர், கரிமேடு பகுதியில் உள்ள காய்கறி, இறைச்சி மார்க்கெட்டுகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  மின்னணு தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் சோதனை

மதுரை புதூர், கரிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் பயன்படுத்தும் எடைகற்கள் மற்றும் தராசுகளில் முறைகேடு நடப்பதாக தொழிலாளர் நலத்துறையினருக்கு புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று புதூர் மற்றும் கரிமேடு பகுதியில் உள்ள காய்கறி, மீன், இறைச்சி மார்க்கெட்டுகளுக்கு நேரில் சென்று அங்கு வியாபாரிகள் பயன்படுத்தி வந்த தராசுகளை அதிரடியாக சோதனையிட்டனர். அதில் பல வியாபாரிகள் பயன்படுத்திய எடைகற்களுக்கு அனுமதி பெறாததும், தராசில் முறைகேடு செய்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உரிய அனுமதி பெறாத தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதூர் மார்க்கெட் வியாபாரிகள் புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் தலைமையிலான போலீசார், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர்.

அபராதம்

2 இடங்களிலும் நடந்த சோதனையின் முடிவில், 23 மின்னணு தராசுகள், 26 மேஜை தராசுகள் மற்றும் 120 எடைக்கற்களை தொழிலாளர் நலத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 11 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யவும் பரிந்துரைத்தனர். முறைகேடாக தராசுகளை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
இதுபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள காய்கறி, இறைச்சி மார்க்கெட்டுகளிலும் அடிக்கடி ஆய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story