1,392 மையங்களில் மெகா முகாம்: 81,443 பேருக்கு கொரோனா தடுப்பூசி-அதிகாரிகள் தகவல்


1,392 மையங்களில் மெகா முகாம்: 81,443 பேருக்கு கொரோனா தடுப்பூசி-அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2021 9:45 PM GMT (Updated: 26 Dec 2021 9:45 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த 16-வது மெகா முகாமில் 81 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த 16-வது மெகா முகாமில் 81 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
1,392 மையங்களில்
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் 1,235 வாக்குச்சாவடி மையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேலம் உள்பட 13 அரசு ஆஸ்பத்திரிகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, நடமாடும் வாகனங்கள் என மொத்தம் 1,392 மையங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டம் முழுவதும் சுமார் 81 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். அதாவது, மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 89 ஆயிரத்து 45 பேர் முதல் தவணையும், 15 லட்சத்து 19 ஆயிரத்து 176 பேர் 2-வது தவணையும் என மொத்தம் 38 லட்சத்து 8 ஆயிரத்து 221 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
16-வது மெகா முகாம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் விழா என்பதால் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. இதனால் மாவட்டம் முழுவதும் 1,392 மையங்களில் நேற்று 16-வது தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டதால் சிறப்பு மையங்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 
அதேநேரத்தில் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் நேற்று இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.
81,443 பேருக்கு தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த 16-வது மெகா முகாம்களில் சேலம் மாநகராட்சி பகுதியில் 16 ஆயிரத்து 181 பேரும், புறநகர் பகுதியில் 40 ஆயிரத்து 386 பேரும், ஆத்தூர் சுகாதார உட்கோட்ட பகுதியில் 24 ஆயிரத்து 876 பேரும் என மொத்தம் 81 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story