ரூ.12 கோடி குத்தகை நிலுவைத்தொகை செலுத்தாததால் தஞ்சையில், நட்சத்திர விடுதிக்கு ‘சீல்’ வைப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை


ரூ.12 கோடி குத்தகை நிலுவைத்தொகை செலுத்தாததால் தஞ்சையில், நட்சத்திர விடுதிக்கு ‘சீல்’ வைப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2021 5:26 PM GMT (Updated: 27 Dec 2021 5:26 PM GMT)

ரூ.12 கோடி குத்தகை நிலுவைத் தொகையை வழங்காததால் தஞ்சையில் நட்சத்திர விடுதிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையிலான அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தஞ்சாவூர்:-

ரூ.12 கோடி குத்தகை நிலுவைத் தொகையை வழங்காததால் தஞ்சையில் நட்சத்திர விடுதிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையிலான அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

நட்சத்திர விடுதி

தஞ்சை சச்சிதானந்த மூப்பனார் சாலையில் ஓட்டல் டெம்பிள் டவர் (3 நட்சத்திர விடுதி) உள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு 8-வது உலக தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்த நேரத்தில் தஞ்சையில் போதுமான நட்சத்திர ஓட்டல்கள் இல்லாத காரணத்தினால் தனியார் விடுதிகள் கட்ட சலுகைகள் வழங்கப்பட்டன. அரசுக்கு சொந்தமான நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளி அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் 30 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் செல்வராஜ் என்பவருக்கு ஓட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. 35 அறைகளுடன், ரெஸ்டாரண்ட், மதுபான பார் வசதியுடன் இந்த நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வந்தது.

விதிமுறை மீறல்

அரசு நிலத்தை யார் குத்தகைக்கு எடுக்கிறார்களோ? அவர்கள் தான் ஓட்டலை நடத்த வேண்டும் என்பது ஒப்பந்த விதிமுறையாகும். ஆனால் விதிமுறையை மீறியதுடன் அரசு அனுமதியின்றி வெங்கடாசலம், குமார் ஆகியோர் ஓட்டலை நடத்தி வந்ததும், இவர்கள் 2 பேரிடமும் ஓட்டலை செல்வராஜ் விதிமுறையை மீறி ஒப்படைத்ததும் அதிகாரிகள் ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும் ரூ.12 கோடி குத்தகை நிலுவை தொகையும் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பலமுறை அதிகாரிகள் நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
விளக்கம் அளிக்கப்படவில்லை
மேலும் விதிமீறலுக்கு உரிய விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அரசு நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு வருவாய்த்துறை சார்பில் நீதிமன்றம் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் கடந்த 14-ந் தேதி குத்தகை விதிமீறலுக்கு உரிய விளக்கம் கோரி குத்தகைதாரருக்கும், தற்போது உரிய அனுமதியின்றி ஓட்டலை நடத்தி வரும் வெங்கடாசலம், குமார் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்ததால் அந்த அறிவிப்பை ஓட்டல் வளாகத்தில் அதிகாரிகள் ஒட்டினர்.

சுற்றுலா பயணிகள்

இந்த நோட்டீசுக்கு வெங்கடாசலம் பதில் அளித்து கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது ஓட்டலை தாங்களே நிர்வகித்து வருவதாக தெரிவித்து இருந்தார். இந்த கடிதத்தின் மூலம் ஓட்டல் நிர்வாகம் மாற்றம் தொடர்பாக அரசிடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறாமல் குத்தகை விதியை மீறியதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். 

சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

பின்னர் வரவேற்பு அறையில் இருந்த பதிவேட்டை ஆய்வு செய்தனர். அப்போது விடுதி அறையில் சுற்றுலா பயணிகள் 17 பேர் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
திடீரென அறைகளை காலி செய்ய சொன்னதால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். இருந்தாலும் அவர்கள் அறைகளை காலி செய்ய 2 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் அறை வாடகை பாக்கியையும் ஓட்டல் நிர்வாகத்திடம் இருந்து அதிகாரிகள் பெற்றுக்கொடுத்தனர். 

‘சீல்’ வைப்பு

சுற்றுலா பயணிகள் வெளியேறிய பின்னர் அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டதுடன், நட்சத்திர ஓட்டல் கதவும் இழுத்து பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
முன்னதாக ஓட்டல் சமையல் அறையில் இருந்த சிலிண்டர்கள் எல்லாம் வெளியே பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டன. நட்சத்திர ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story