மயிலாடுதுறையில், நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்


மயிலாடுதுறையில், நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Dec 2021 5:08 PM GMT (Updated: 2021-12-28T22:38:19+05:30)

மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி மயிலாடுதுறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் பிளாஸ்டிக் மாலைகளை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை:
மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிக்க பயன்படும் நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணி மயிலாடுதுறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் பிளாஸ்டிக் மாலைகளை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெட்டி மாலைகள் தயாரிப்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் 3 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் திருநாளில் 2-ம் நாள் உழவு தொழிலுக்கு உதவியாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, நெட்டி மாலைகள், நெற்கதிர் மாலைகள் அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த விழாவில் மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே ஆகும். மயிலாடுதுறை மூங்கில்தோட்டம், மணக்குடி கிராமங்களிலும், செம்பனார்கோவில் அருகே கீழையூர், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதிகளிலும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை அலங்கரிப்பதற்காக நெட்டி மாலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நெட்டி மாலை செய்யும் தொழிலை 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக செய்து வந்தனர். தற்போது நெட்டி செடிகள் மயிலாடுதுறை பகுதியில் முற்றிலும் அழிந்ததாலும், பிளாஸ்டிக் மாலைகள் விற்பனைக்கு வந்ததாலும் இத்தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். 
போதிய விற்பனை நடைபெறுமா?
இதுகுறித்து மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் கிராமத்தில் 3 தலைமுறைகளாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை குடும்பத்தினர் அனைவருமே நெட்டி மாலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சிவானந்தம் என்பவர் கூறுகையில், நான் எனது குடும்பத்தினருடன் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு சென்று 2 நாட்கள் தங்கி அங்கு விளையக்கூடிய நெட்டி செடிகளை பறித்து வந்து, அதை நன்கு உலர வைத்து பின்பு பலவித வடிவங்களில் வடிவமைத்து அதற்கான வர்ண சாயத்தில் நனைத்து சூரிய ஒளியில் காய வைப்போம். இந்த நெட்டி மாலைகளை கட்டுவதற்காக இயற்கை குணம் கொண்ட தாழம்பூ மரத்தில் இருந்து எடுக்கக்கூடிய இழை நார்களை கொண்டு நெட்டி மாலைகள் உருவாக்குகிறோம்.
இதற்காக ஆகக்கூடிய செலவு முன்பைவிட தற்போது அதிகமாக உள்ளது. ஒருநாள் விற்பனையை நம்பி குடும்பத்தினரோடு 3 மாதங்கள் உழைத்து உருவான நெட்டிமாலைகள் தற்போது உள்ள சூழ்நிலையில் போதிய விற்பனை நடைபெறுமா என்பதே கவலையாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சந்தைகளில் விற்பனையாகும் பிளாஸ்டிக் மாலைகள்தான். 
கண்ணை கவரும் வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட மாலைகள் அதிகம் விற்பனையாவதால், வணிகர்கள் நெட்டி மாலைகளை கொள்முதல் செய்வது குறைந்துவிட்டது. பொதுமக்கள் கண்ணை கவரும் வண்ணங்களையும், வடிவங்களையுமே பார்க்கிறார்களே தவிர, அதில் உள்ள ஆபத்தை உணர்வதில்லை என்றார்.
மகிழ்ச்சி தரும்
மேலும், கால்நடைகள் பிளாஸ்டிக் மாலைகளை தின்று விட்டால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதேசமயம் பாரம்பரிய நெட்டி மாலைகளை தின்றால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் மண்ணுக்கும் பாதிப்பில்லை. எனவே மாற்றம் மக்களிடம் வந்தால் மட்டுமே தங்களது 3 மாத உழைப்பின் பலனை முழுவதுமாய் பெறமுடியும் என சிவானந்தம் உருக்கத்துடன் தெரிவித்தார். மாட்டுப்பொங்கல் அன்று உழவர்கள் தங்களது மாடுகளை நெட்டி மாலைகள் கொண்டு அலங்கரித்து பார்ப்பதுதான் மகிழ்ச்சி தரும். எனவே பிளாஸ்டிக் மாலைகளை அரசு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 எனவே பாரம்பரியமாக இயற்கையோடு இணைந்து நெட்டி மாலைகளை பயன்படுத்தி மாட்டுப்பொங்கலை கொண்டாடினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் அளிப்பது மட்டுமல்ல, இயற்கைக்கும் பாதிப்பில்லாமல் இருக்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story