கல்லூரி பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை-மதுரை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


கல்லூரி பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை-மதுரை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Dec 2021 7:57 PM GMT (Updated: 28 Dec 2021 7:57 PM GMT)

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை
வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பேராசிரியர்-பேராசிரியை
விருதுநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சூரியகலா. இவருக்கும் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ்குமார் (வயது 41) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 
பின்னர் இவர்கள் இருவரும் மதுரை திருமங்கலத்தில் வசித்து வந்தனர். மகேஷ்குமார், ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். சூரியகலா, திருமங்கலம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றினார்.
தற்கொலை
அந்த சமயத்தில் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட மகேஷ்குமார், தனது மனைவியை பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி தனது தந்தையிடம் தெரிவித்தால், தனது சகோதரியின் எதிர்காலம் பாதிக்கும் என்று கருதிய சூரியகலா, எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால், கூடுதல் வரதட்சணை கேட்ட பிரச்சினையால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சூரியகலா, திருமணமாகி 14 மாதத்திலேயே (அதாவது கடந்த 2011-ம் ஆண்டு) தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து, மகேஷ்குமாரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜெ.காவேரிசாந்தி ஆஜரானார். விசாரணை முடிவில், மகேஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகர மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.

Next Story