ஈரோடு மாவட்டத்தில் கோர்ட்டு வழக்குகளை கவனிக்கும் போலீசார் கடும் அதிருப்தி


ஈரோடு மாவட்டத்தில்  கோர்ட்டு வழக்குகளை கவனிக்கும் போலீசார் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 29 Dec 2021 2:36 PM GMT (Updated: 29 Dec 2021 2:36 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கோர்ட்டு வழக்குகளை கவனிக்கும் போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கோர்ட்டு வழக்குகளை கவனிக்கும் போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கோர்ட்டு போலீசார்
ஈரோடு மாவட்டத்தில் 42 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் பதிவாகி வரும் வழக்குகள் அனைத்தும் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கான கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டு வருகின்றன. போலீஸ் நிலைய வழக்குகள் தொடர்பாக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஏட்டு அந்தஸ்தில் உள்ள போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். சில நிலையங்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களும் இந்த பணியில் உள்ளனர்.
நிலைய வழக்கு தொடர்பான விசாரணைகள், அழைப்பாணைகள் உள்ளிட்ட விவரங்களை நிலைய அதிகாரிகளுக்கு தந்து, உரிய நேரத்தில் அதிகாரிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது இவர்களின் பணியாக இருக்கிறது. குறிப்பாக, நிலைய வழக்குகளில் தங்களுக்கு ஆதரவான சாட்சிகளை உரிய நேரத்தில் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்துவது, அரசு வக்கீல்கள் சாட்சிகளை விசாரிக்கவும், எதிரணி வக்கீல்கள் விசாரிக்கவும் கோர்ட்டின் அழைப்பு உத்தரவுகளுக்கு ஏற்ப ஆஜர் படுத்துவார்கள்.
சாட்சிகள்
சாட்சிகள், வழக்கின் புகார்தாரர்கள் உள்ளிட்டவர்களை சரியான நேரத்துக்கு வரச்செய்யவும், கோர்ட்டு அளிக்கும் சம்மன்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது வழக்கமான நடைமுறையாகும்.
இந்தநிலையில் சமீபகாலமாக ஈரோடு காவல்துறை உயர் அதிகாரிகள் வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கத்தில் சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன்பேரில், ஒவ்வொரு வழக்கின் சாட்சிகளையும் விரைவாக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் கோர்ட்டு போலீசார், வழக்குகளுக்கு சாட்சிகளை தயார் செய்து கோர்ட்டுகளுக்கு அழைத்து வருகிறார்கள். நீதிபதிகள் சாட்சிகளை விசாரிக்க அனுமதி அளித்தால் மட்டுமே அவர்களை விசாரிக்க முடியும். இதனால், முன்கூட்டியே போலீசார் சாட்சிகளை அழைத்து வந்தாலும் அவர்கள் விசாரிக்கப்படுவதில்லை.
மனஉளைச்சல்-அதிருப்தி
இதனால் சாட்சிகள் வந்து விட்டு வெறுமனே திரும்ப செல்கிறார்கள். இவ்வாறு ஓரிரு முறை வரும்சாட்சிகள், தாங்கள் வெறுமனே திருப்பி அனுப்பப்படுவதால், அதற்கு பின்னர் போலீசார் அழைத்தாலும் வருவதில்லை. இதனால் நீதிபதி, அனுமதிஅளிக்கும் நாளில் சாட்சிகள் வராமல் போலீசார் திணறுகிறார்கள். அதை சாக்காக வைத்து உயர் அதிகாரிகள் கோர்ட்டு போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது கோர்ட்டு போலீசார் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கூறிய போலீசார் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும் போலீசார் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் கோர்ட்டுகளில் வழக்குகளை கவனிக்கும் போலீசார் அனுபவம் வாய்ந்தவர்கள். கோர்ட்டுகளில் எப்போது சாட்சிகளை விசாரிப்பார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து அதற்கு ஏற்ப சாட்சிகளை தயார் செய்து அழைத்து வருவார்கள். எனவே வழக்குகள் விசாரணையில் தாமதமின்றி நடைபெற்று வந்தன. ஆனால், போலீசாரின் அனுபவத்தை விட உயர் அதிகாரிகளின் உத்தரவுதான் முக்கியம் என்று சமீப காலமாக முன்கூட்டியே சாட்சிகளை அழைத்துச்சென்றாலும், அவர்கள் முறையாக விசாரிக்கப்படுவதில்லை. 
விருப்ப ஓய்வு
ஒரு சாட்சியை தயார் செய்து கோர்ட்டுக்கு அழைத்து வருவது என்பது சாதாரண வேலை இல்லை. ஒரு அழைப்பாணை அனுப்பினால் அவர்கள் வந்து விட்டு செல்வார்கள் என்பதுபோன்று தோன்றலாம். ஆனால் ஒரு வழக்கை பொறுத்தவரை சாட்சிகள் மிக முக்கியமானவர்கள். போலீஸ் தரப்பு பதிவு செய்த வழக்கின் உண்மையை கோர்ட்டில் சரியாக எடுத்து வைப்பவர்கள் சாட்சிகள். எனவே வழக்கில் பலமே சாட்சிகள்தான். அவர்கள் எந்த ஒரு பலனும் இல்லாமல் வழக்கின் வெற்றிக்காக தங்கள் வேலைகளை விட்டு விட்டு வருவார்கள். ஒரு நாள், 2 நாள் வருவார்கள். தொடர்ந்து அவர்கள் வரடியாது. இதனால் வழக்கு விசாரணை பாதிப்பதுடன், நீதிபதிகளின் கண்டனம், காவல்துறை உயர் அதிகாரிகளின் கண்டனம் என்று அனைத்தையும் கோர்ட்டு போலீசார் ஏற்க வேண்டியது உள்ளது. எனவே இதுபற்றி உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி, வழக்குகள் வேகமாகவும், சரியாகவும் நடக்கும் வகையில் கோர்ட்டு போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றனர். சமீபகாலமாக மன உளைச்சல் காரணமாக விருப்ப ஓய்வு கேட்கும் முடிவில் இருக்கும் போலீசாரின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story