விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி


விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 30 Dec 2021 4:54 PM GMT (Updated: 30 Dec 2021 4:54 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.

விழுப்புரம், 

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் வளவனூர், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், அனந்தபுரம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர் ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவிகள் (கண்ட்ரோல் யூனிட்) ஆகியவற்றை சரிபார்க்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதில் நல்ல நிலையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 1,105-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 550-ம் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மீண்டும் சரிபார்ப்பதற்காக விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை நேற்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை சீரியல் எண்கள் வரிசைப்படி சரியாக உள்ளதா என்று அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டி வாரியாக விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் விக்கிரவாண்டி அண்ணாத்துரை, வளவனூர் ஷேக்லத்தீப் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சரிபார்த்தனர்.

அப்போது வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், அ.தி.மு.க. நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், பா.ஜ.க. எஸ்.சி. அணி மாநில செயலாளர் ரகு, தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி இளையராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story