காய்கறிகள், பழங்களை அனுப்பும் கிசான் ரெயில் விழிப்புணர்வு பிரசாரம்


காய்கறிகள், பழங்களை அனுப்பும் கிசான் ரெயில் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 30 Dec 2021 7:46 PM GMT (Updated: 30 Dec 2021 7:46 PM GMT)

மதுரை கோட்டத்தில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தங்களது விளைபொருட்களை சலுகை கட்டணத்தில் கிசான் ரெயிலில் அனுப்புவதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை கோட்ட மேலாளர் நேற்று தொடங்கி வைத்தார்.

மதுரை, 

மதுரை கோட்டத்தில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட தங்களது விளைபொருட்களை சலுகை கட்டணத்தில் கிசான் ரெயிலில் அனுப்புவதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை கோட்ட மேலாளர் நேற்று தொடங்கி வைத்தார்.

கிசான் ரெயில்

இந்திய ரெயில்வேயில், சிறு குறு விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை சலுகை கட்டணத்தில் ரெயிலில் அனுப்ப "கிசான் ரெயில்" போக்குவரத்து திட்டம் 2020-21-ம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், குடைமிளகாய், கேரட், காலிபிளவர், பச்சை மிளகாய், வெள்ளரி, பட்டாணி, பூண்டு, பீன்ஸ் போன்ற காய்கறிகள் மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, எலுமிச்சை, மாதுளை, பேரிக்காய், கிவி, லிச்சி போன்ற பழ வகைகள் ஆகியவற்றை 50 சதவீத சலுகை கட்டணத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் கிசான் ரெயில் மூலம் அனுப்ப முடியும். 
காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி அதிக கொள்ளளவில் பால் மற்றும் பால் பொருட்களை அனுப்பும் போது, அதற்காக குளிரூட்டப்பட்ட பிரத்யேக கன்டெய்னர் பெட்டி வசதியும் உள்ளது.
இதில் விவசாயிகளுக்கான சலுகைக்கட்டணம் தவிர மீதமுள்ள கட்டணத்தை மத்திய அரசின் உணவு உற்பத்தி துறைகள் அமைச்சகம் ரெயில்வேக்கு செலுத்தி விடும். இந்த திட்டத்தில், மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அதிகம் விளையும் விவசாய விளைபொருட்கள் பீகார், டெல்லி, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு கிசான் ரெயில் மூலம் அனுப்பப்படுகிறது. தென்னக ரெயில்வேயிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விழிப்புணர்வு

இதற்காக மதுரை கோட்டத்தில் வர்த்தகப்பிரிவு சார்பில் வணிக வளர்ச்சிக்குழு மூலம், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் திட்டத்தின் பலன்கள் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கிசான் ரெயில் மூலம் காய்கறிகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சாலைப்போக்குவரத்தை காட்டிலும், பல மணி நேரம் முன்னதாக சென்றடையும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை தென் மாவட்ட விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் ஒரு மாதகால விழிப்புணர்வு பிரசாரம் மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மேலாளரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, கிசான் ரெயில் குறித்த துண்டுபிரசுரங்களை கோட்ட மேலாளர் பத்மநாபன் நேற்று வெளியிட்டார்.
அதன் முதல் பிரதியை முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா பெற்றுக்கொண்டார். இந்த விழிப்புணர்வு பிரசாரம் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

Next Story