கர்நாடகத்தில் புதிதாக 707 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 707 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Dec 2021 8:56 PM GMT (Updated: 30 Dec 2021 8:56 PM GMT)

கர்நாடகத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

பெங்களூரு: புதிதாக 707 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதா என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

பெங்களூருவில் 565 பேர்

கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 686 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 707 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை 30 லட்சத்து 6 ஆயிரத்து 505 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 565 பேர் பாதிக்கப்பட்டனர். உடுப்பியில் 19 பேர், ஹாசனில் 17 பேர், மைசூருவில் 16 பேர், குடகில் 12 பேர், தட்சிண கன்னடாவில் 11 பேர், பெலகாவி, தார்வாரில் தலா 8 பேர், உத்தர கன்னடாவில் 6 பேர், பல்லாரி, கோலாரில் தலா 5 பேர், பெங்களுரு புறநகரில் 4 பேர், சிக்கமகளூரு, கலபுரகி, சிவமொக்கா, விஜயாப்புராவில் தலா 3 பேர், சித்ரதுர்காவில் 2 பேர், சாம்ராஜ்நகர், தாவணகெரே, யாதகிரியில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டனர். 8 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

சுகாதாரத்துறை அதிர்ச்சி

கொரோனாவுக்கு மேலும் 3 பேர் இறந்தனர். இதில் பெங்களூரு நகரில் மட்டும் 3 பேர் உயிரிழந்தனர். 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. நேற்று 252 பேர் குணம் அடைந்தனர். இதுவரை 29 லட்சத்து 59 ஆயிரத்து 926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 8 ஆயிரத்து 223 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் தான் பதிவாகி வந்தது. பெங்களூருவிலும் தினசரி பாதிப்பு 400-க்கும் கீழ் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 707 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. பாதிப்பு அதிகரித்து உள்ளதால் சுகாதாரத்துறையும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

Next Story