சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம்; கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது- கிராம மக்கள் பீதி


சத்தியமங்கலம் அருகே தோட்டத்தில் புகுந்து சிறுத்தை அட்டகாசம்; கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது- கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 30 Dec 2021 10:31 PM GMT (Updated: 30 Dec 2021 10:31 PM GMT)

சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
 சிறுத்தை அட்டகாசம்
சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட புளியங்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் கூல முத்தான். விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வீட்டின் அருகில் உள்ளது. தோட்டம் அருகே உள்ள தொழுவத்தில் கன்றுக்குட்டியை வளர்த்து வந்தார். கூல முத்தான் வழக்கம்போல் கன்றுக்குட்டிக்கு தீவனங்களை வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு தூங்க சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தொழுவத்தில் மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது.
சத்தம் கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது வயிற்றிலும், கழுத்திலும் பலத்த ரத்த காயத்துடன் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். கன்றுக்குட்டியின் அருகே பார்த்தபோது சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது. வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கடித்து குதறி கொன்றுவிட்டு சென்றது தெரியவந்தது.
நிவாரணம்
இதுபற்றி சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்ட்டுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் பெர்னார்ட் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று இறந்த கன்றுக்குட்டியை பார்வையிட்டனர். மேலும் அதன் அருகே உள்ள கால்தடங்களை பார்த்து கன்றுக்குட்டியை கடித்துக்கொன்றது சிறுத்தை தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயி கூலமுத்தானுக்கு வனத்துறையினர் ஆறுதல் கூறி, அவருக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘புளியங்கோம்பை பகுதியில் சிறுத்தை அடிக்கடி புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. மனிதர்களை உயிர்ப்பலி வாங்கும் முன்பு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். தோட்டத்தில் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற சம்பவம் அந்தப்பகுதி மக்களை பீதி அடையச்செய்துள்ளது.

Next Story