மாவட்டத்திற்கு 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு; கலெக்டர் தகவல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 31 Dec 2021 1:34 PM GMT (Updated: 31 Dec 2021 1:34 PM GMT)

கரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்திற்கு 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர், 
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கரூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த மாதம் விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து விரிவாக ஆய்வு செய்த கலெக்டர், கூட்டத்தில் விவசாயிகள் ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, கோரிக்கைகளின் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அலவலர்களையும் விளக்கமளிக்க அறிவுறுத்தினார். 
பின்னர் கலெக்டர் கூறுகையில், நமது கரூர் மாவட்டத்திற்கு 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
21 இடங்களில் நேரடி நெல் கொள்முதல்
குளித்தலை வட்டத்தில் நங்கவரம், நச்சலூர், பனிக்கம்பட்டி, நெய்தலூர், இனுங்கூர், குமாரமங்கலம், சத்தியமங்கலம், கே.பேட்டை, தோகைமலை, பொய்யாமணி ஆகிய 10 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் மேட்டுமகாதானபுரம், லாலாபேட்டை, கட்டளை, வீரராக்கியம், கோவக்குளம் ஆகிய 5 இடங்களிலும், மண்மங்கலம் வட்டத்தில் மொச்சகொட்டாம்பாளையம், பஞ்சமாதேவி, பள்ளபாளையம் ஆகிய 3 இடங்களிலும், புகளூர் வட்டத்தில் அஞ்சூர், தொட்டம்பட்டி ஆகிய 2 இடங்களிலும், அரவக்குறிச்சி வட்டத்தில் சின்னதாராபுரத்திலும் என 21 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போதிய ஏற்பாடு
இதில் நச்சலூர், பனிக்கம்பட்டி, பொய்யாமணி ஆகிய 3 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்திட போதிய வசதிகள் செய்துதரப்படும். 
மேலும், எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்வது என்பது குறித்த தொழில்நுட்ப முறைகளை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்க போதிய ஏற்பாடு செய்யப்படும். அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் வேளாண்சார்ந்த திட்டங்களை அனைத்து விவசாயிகளும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story