ஒரே ஆண்டில் குண்டர் சட்டத்தில் 71 பேர் கைது


ஒரே ஆண்டில் குண்டர் சட்டத்தில் 71 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2021 3:17 PM GMT (Updated: 31 Dec 2021 3:17 PM GMT)

தேனி மாவட்டத்தில் ஒரே ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 71 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

தேனி: 


35 கொலைகள்
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு குற்றத்தடுப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, சட்டமன்ற தேர்தல் பணி ஆகியவற்றோடு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டனர். கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டில் மொத்தம் 33 கொலை சம்பவங்கள் நடந்தன. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஓராண்டு கால கட்டத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 35 ஆகும். அதுபோல், 2020-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் மொத்தம் 202 பேர் உயிரிழந்தனர். கடந்த ஓராண்டு கால கட்டத்தில் நடந்த விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளனர்.

குண்டர் சட்டம்
மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மொத்தம் 73 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 71 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடந்த கொலை, விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் காலங்களில் அதை குறைக்கவும், தேவையான இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

Next Story