மதுரையில் புதுப்பெண் கழுத்தை நெரித்து கொலை


மதுரையில் புதுப்பெண் கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 1 Jan 2022 1:08 AM IST (Updated: 1 Jan 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் புதுப்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரையில் புதுப்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெயிண்டர்

மதுரை நியூ எல்லீஸ் நகர் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் நாகவேல் (வயது 33). பெயிண்டர். இவருக்கும் அலங்காநல்லூர் தாலுகா அய்யங்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுதா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்கள் கழித்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று கணவரிடம் சுதா தெரிவித்துள்ளார்.
ஆனால் நாகவேல் தனது குடும்பத்தினருடன்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து நாகவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் தனிக்குடித்தனம் செல்வது குறித்து தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.

 கழுத்தை நெரித்து கொலை

அதில் ஆத்திரம் அடைந்த நாகவேல் மனைவியின் கழுத்தை நெரித்த போது சுதா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேராக எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையம் சென்றார். தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகவேலுவை கைது செய்தனர்.

தனிக்குடித்தனம்

அவர் போலீசாரிடம் கூறும் போது, “நான் குடும்பத்தில் மூத்தவன் என்பதால் சிறிது காலம் கழித்து திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்திருந்தேன்.. ஆனால் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பின்னர்தான், சுதா என்னை விட ஒரு வயது மூத்தவர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் தொடர்ந்து தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று கூறி வந்தார்.. இது தவிர செல்போனில் அடிக்கடி பேசி கொண்டிருந்தார். அதை கண்டித்தும் நான் சொல்வதை அவர் கேட்க வில்லை. எனவே தனிக்குடித்தனம் பற்றிய தகராறில் அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்” என்று போலீசில் தெரிவித்துள்ளார்.
திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story