போக்குவரத்து விதிகளை மீறிய 3 லட்சம் வாகனங்களுக்கு ரூ.6¾ கோடி அபராதம்


போக்குவரத்து விதிகளை மீறிய 3 லட்சம் வாகனங்களுக்கு ரூ.6¾ கோடி அபராதம்
x
தினத்தந்தி 1 Jan 2022 1:30 AM IST (Updated: 1 Jan 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறிய 3 லட்சம் வாகனங்களுக்கு ரூ.6¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறிய 3 லட்சம் வாகனங்களுக்கு ரூ.6¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறினார்.
125 பேர் மீது குண்டர் சட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டில் 86 ரவுடிகள், 12 பாலியல் குற்றவாளிகள், 10 கொள்ளையர்கள், 17 போதை பொருள் கடத்தல்காரர்கள் என மொத்தம் 125 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல் 2 ஆயிரத்து 554 பேர் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 1,800 பேர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது. அதை மீறி குற்றத்தில் ஈடுபட்ட 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாலை விதிகளை மீறிய 8 லட்சத்து 99 ஆயிரத்து 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ரூ.6¾ கோடி அபராதம்
அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 732 பேர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 4 லட்சத்து 61 ஆயிரத்து 128 பேர் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அதோடு மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய 2 லட்சத்து 97 ஆயிரத்து 490 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.6 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் 226 கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்மூலம் 894 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
8 டன் புகையிலை பொருட்கள்
புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 833 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சத்து 87 ஆயிரத்து 927 மதிப்பில் 8 டன் 732 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர மாவட்டம் முழுவதும் காணாமல் போன 298 பேரில் 274 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 284 பேர் கைது செய்யப்பட்டனர். எனவே குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story