நெல் களமாக மாறிய சாலை
வெம்பக்கோட்டை அருகே சாலைகள் நெல் களமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே சாலைகள் நெல் களமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தொடர்மழை
வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நெல் களங்கள் அமைக்கப்பட்டது. விவசாயிகள் தானியங்களை இலவசமாக தரம் பிரித்துக் கொள்வதற்கு வசதியாக இருந்தது. நாளடைவில் நெல்களங்கள் பராமரிக்கப்படாததால் முற்றிலும் சேதமடைந்தது.
இதனால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடர் மழை காரணமாக வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. கிணறுகளும் நிரம்பி விட்டது.
நெல் களங்கள்
அதிலும் குறிப்பாக வெம்பக்கோட்டை அணையும் நிரம்பியதால் விவசாயிகள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து எட்டக்காபட்டி விவசாயி திருமலை கூறியதாவது:-
தை மாதத்தில் கம்பு அறுவடை பணிகள் தொடங்கி விடும். அப்போது அனைத்து விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை தரம்பிரிப்பதற்காக கொண்டு வருவார்கள். தற்போது நெல் களம் இல்லாததால் மெயின் ரோட்டில் களமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். காற்று வீசும் வரை காத்திருக்கும் போது வாகன ஓட்டிகளும் இதனால் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆகையால் வாகன ஓட்டிகளும் சிரமம் இல்லாமல் இருக்கவும் விவசாயிகளுக்கும் தரம் பிரிப்பது வசதியாக இருக்கவும் நெல்களம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story