தமிழக மீனவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது மனிதாபிமானற்ற செயல் என்றும், தமிழக மீனவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
மதுரை,
இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது மனிதாபிமானற்ற செயல் என்றும், தமிழக மீனவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையைச் சேர்ந்தவரும், தமிழர் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான தீரன் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 68 மீனவர்களை கடந்த வாரம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்று, இலங்கை சிறையில் அடைத்தனர்.
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் இலங்கை நாட்டின் சுகாதாரத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது ஏற்புடையதல்ல. 68 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது விரைவில் 68 தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.
மனிதாபிமானமற்ற செயல்
இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “68 இந்திய மீனவர்களில் 2 பேர் சிறார்கள் (மைனர்). அவர்களை சரியான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து நீதிபதிகள், “தமிழக மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி ஊற்றி இருப்பது மனிதாபிமானம் இல்லாத செயல். மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”் என கருத்து தெரிவித்தனர்.
மேலும் “மத்திய அரசு தூதரக ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு, பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 68 மீனவர்களையும் சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது” என்றனர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story