கன்னியாகுமரி-களியக்காவிளை நான்கு வழிச்சாலை பணி நிறுத்தம்


கன்னியாகுமரி-களியக்காவிளை நான்கு வழிச்சாலை பணி நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Jan 2022 1:53 AM IST (Updated: 1 Jan 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2ஆயிரம் கோடியில் நடந்து வந்த கன்னியாகுமரி- களியக்காவிளை நான்கு வழிச்சாலை பணி நிறுத்தப்பட்டது. இதற்கு மண் கிடைக்காததே காரணம் என்று அதிகாரி தெரிவித்தார்.

நாகர்கோவில், 
ரூ.2ஆயிரம் கோடியில் நடந்து வந்த கன்னியாகுமரி- களியக்காவிளை நான்கு வழிச்சாலை பணி நிறுத்தப்பட்டது. இதற்கு மண் கிடைக்காததே காரணம் என்று அதிகாரி தெரிவித்தார்.
நான்கு வழிச்சாலை                   திட்டப்பணி
குமரி மாவட்டத்தின் வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரையில் 16 கி.மீ. தூரத்துக்கும் (என்.எச்.47பி சாலை), கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 54 கி.மீ. தூரத்துக்கும் (என்.எச்.47 சாலை) என மொத்தம் 70 கி.மீ. தூரத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது.
இரண்டு பேக்கேஜ்களாக நடந்து வந்த இந்த பணிகளில் காவல் கிணறு முதல் நாகர்கோவில் வரையிலான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான நான்கு வழிச்சாலை பணியில் தான் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் சாலை அமைக்க தேவையான மண் கிடைக்காததுதான் என்று கூறப்படுகிறது. அதிலும் இந்த நான்கு வழிச்சாலை பணியில் 16 கி.மீ. நீளத்துக்கு துண்டு, துண்டாக பணிகள் நடைபெறாமல் உள்ளது. இந்த 16 கி.மீ. தூரத்துக்கான சாலையை நிறைவு செய்ய 540 லட்சம் டன் மண் தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகிறார்கள். இதனால் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. ஏற்கனவே செய்த பணிகளில் முடிக்கப்படாமல் இருந்த பணிகள் மட்டும் நடந்து வந்தது.
சட்ட போராட்டம்
இந்தநிலையில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை நிறுத்தி விட்டது என்ற தகவல் பரவி வருகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி வைரலாக பரவி வந்தது. இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் நடந்து வந்த கன்னியாகுமரி- களியக்காவிளை வரையிலான நான்கு வழிச்சாலைப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகளை நடத்த மண் தேவைப்படுகிறது. மண் கிடைக்காததால் காண்டிராக்டர்கள் அரசுக்கு எதிராக அதிகமான இழப்பீட்டு தொகை கேட்கிறார்கள். 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியை எடுத்த காண்டிராக்டர்கள் மண் கிடைக்காததால் எந்த பணியும் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுடைய என்ஜினீயர்கள் பயன் இல்லாமல் இருந்து வருகிறார்கள். சாதனங்களும் கிடப்பிலேயே கிடக்கிறது. இதனால் அரசிடம் ரூ.750 கோடி இழப்பீடு கேட்கிறார்கள். இதனால் அரசுக்கும், காண்டிராக்டர்களுக்கும் சட்ட போராட்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலை
அதனால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக டிசம்பர் மாத இறுதியில் உத்தரவுகளும் வந்துள்ளது. அதற்காக இந்த அலுவலகத்தை மூடும் நிலை ஏற்படாது. ராஜபாளையம்- செங்கோட்டை நான்கு வழிச்சாலை திட்டம் நடைபெற உள்ளது. திருச்செந்தூர்- கன்னியாகுமரி நான்குவழிச்சாலை பணி நடைபெற வேண்டி உள்ளது. இந்த பணிகள் தொடக்க நிலையில்தான் இருக்கிறது.
காவல்கிணறு- நாகர்கோவில் நான்குவழிச்சாலை பணிக்கு குறைவாகத்தான் மண் தேவைப்படுகிறது. இதை குமரி மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். எனவே இந்த சாலை பணிகள் விரைவில் முடிந்துவிடும். மார்ச் மாத இறுதிக்குள் வேலைகள் முடிந்து விடும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் நான்கைந்து திட்டங்கள்
காவல்கிணறு-நாகர்கோவில், கன்னியாகுமரி- களியக்காவிளை நான்கு வழிச்சாலை பணிகள் சுமார் ரூ.3 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்ட பணியாகும். கிட்டத்தட்ட 1,900 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றுள்ளது. இன்னும் ரூ.1,100 கோடியில்தான் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. அதுவும் குமரி மாவட்டத்தில் மண் கிடைத்தால்தான் இந்த தொகையில் முடியும். பக்கத்து மாவட்டத்தில் மண் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மேலும் ரூ.300 முதல் ரூ.400 கோடி வரை செலவு அதிகமாகி விடும்.
இது மட்டுமின்றி மண் கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் மேலும் நான்கைந்து திட்டங்களை நிறுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதாவது பொள்ளாச்சி- கோவை, திருச்சி- கல்லகம், விக்கிரவாண்டி- தஞ்சை சோழபுரம், மதுரை செட்டிகுளம்- நத்தம் உள்ளிட்ட நான்கு வழிச்சாலைத் திட்ட பணிகளை மத்திய அரசு நிறுத்தும் நிலையில்தான் இருக்கிறது. முதலில் குமரி மாவட்ட திட்டத்தை தான் அறிவித்து இருக்கிறார்கள்.
புதிய டெண்டர்
கன்னியாகுமரி- களியக்காவிளை நான்கு வழிச்சாலை பணியில் 16 கி.மீ. தூரத்துக்கான பணிகள் துண்டு, துண்டாக நிற்கிறது. துண்டு, துண்டாக இருக்கும் பகுதிகளில் குளங்கள் இருப்பதால் பாலங்கள் அமைக்க வேண்டியது வரும். இனிமேல் இந்த பணிகள் தொடங்க வேண்டும் என்றால் மீண்டும் அழுத்தம் கொடுத்தாலும், புதிதாக டெண்டர் விட்டுத்தான் பணிகளை தொடங்க வேண்டியதாக இருக்கும். தற்போது இந்த பணியை எடுத்த காண்டிராக்டர்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்திருப்பதால் இந்த பணியை மீண்டும் எடுக்கவும் ஆர்வம் இருப்பது போல் தெரியவில்லை.
ஆனால் பணிகளை முழுமையாக நிறுத்தவில்லை. பாதியாக நிற்கும் வேலைகளை அப்படியே விட்டுச் செல்ல முடியாது. அப்படி விட்டுச் சென்றால் காண்டிராக்டர்களுக்கு பணம் கொடுக்கவும் முடியாது. அதனால் பாதியில் நிற்கும் பணிகளை அதாவது சிறு, சிறு பாலம் கட்டுமான பணிகள், பெயிண்டிங் வேலைகள் உள்ளிட்டவற்றை மட்டும் நிறைவு செய்து வருகிறோம். இந்த பணிகளும் இன்னும் 2, 3 மாதங்கள் நடைபெறும். அதன் பிறகு முழுமையாக பணிகள் நிறுத்தப்பட்டு விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story