மாலூர் பட்டண பஞ்சாயத்தை பா.ஜனதா கைப்பற்றியது
ஒரு வாக்கு வித்தியாசத்தில் மாலூர் பட்டண பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிபெற்றார். இதன்மூலம் மாலூர் பட்டண பஞ்சாயத்தை பா.ஜனதா கைப்பற்றியது.
கோலார் தங்கவயல்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் மாலூர் பட்டண பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிபெற்றார். இதன்மூலம் மாலூர் பட்டண பஞ்சாயத்தை பா.ஜனதா கைப்பற்றியது.
மாலூர் பட்டண பஞ்சாயத்து
கோலார் மாவட்டம் மாலூர் பட்டண பஞ்சாயத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 31 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 27 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆவர். 4 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாலூர் பட்டண பஞ்சாயத்தை காங்கிரஸ் கைப்பற்றியது. இதில் பா.ஜனதா 10 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 5 இடத்திலும் வெற்றிபெற்று இருந்தனர்.
பின்னர் சுயேச்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் முரளிதர் மாலூர் பட்டண பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாலூர் பட்டண பஞ்சாயத்து தலைவர் பதவி இட ஒதுக்கீட்டின்படி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் முரளிதர் பட்டண பஞ்சாயத்து தலைவர் ஆனார்.
ஐகோர்ட்டில் வழக்கு
10 மாதங்கள் தலைவராக பதவி வகித்து வந்த அவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட இருந்தார். இந்த நிலையில் மாலூர் பட்டண பஞ்சாயத்தை கைப்பற்ற பா.ஜனதா வியூகம் வகுத்தது. இதுபற்றி அறிந்த முரளிதர், பா.ஜனதாவைச் சேர்ந்த நியமன உறுப்பினர்கள் 4 பேரும் பட்டண பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பேரில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று மாலூர் பட்டண பஞ்சாயத்து அலுவலகத்தில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
பா.ஜனதா கைப்பற்றியது
அதில் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவ்யா சங்கர், பா.ஜனதாவைச் சேர்ந்த அனிதா நாகராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். மாலூர் தாசில்தார் ரமேஷ் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். இதில் கோர்ட்டு உத்தரவை மீறி பா.ஜனதாவைச் சேர்ந்த நியமன உறுப்பினர்கள் 4 பேரும் வாக்களித்தனர். மேலும் பா.ஜனதாவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யும் வாக்களித்தனர். இதுதவிர சுயேச்சை ஒருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதனால் பா.ஜனதாவைச் சேர்ந்த வேட்பாளர் அனிதா நாகராஜ் 17 வாக்குகள் பெற்று மாலூர் பட்டண பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் பவ்யா சங்கர் 16 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிபெற்று மாலூர் பட்டண பஞ்சாயத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story