பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 2:29 AM IST (Updated: 1 Jan 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய பிரபல ரவுடியை, துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:பெங்களூருவில் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய பிரபல ரவுடியை, துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. 

சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து

பெங்களூரு யஷ்வந்தபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் ஒன்று நடந்திருந்தது. இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிலரை போலீசார் கைது செய்திருந்தார்கள். ஆனால் இந்த கொள்ளையை அரங்கேற்றிய பிரபல ரவுடி திவாகர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். 

இந்த நிலையில், கடந்த மாதம் (டிசம்பர்) 29-ந்தேதி பூபசந்திரா பகுதியில் பதுங்கி இருந்த திவாகரை பிடிக்க யஷ்வந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராத்தோடு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராத்தோடு, திவாகரை பிடிக்க முயன்றார். அந்த சமயத்தில் திவாகர், வினோத் ராத்தோடுவை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

தப்பி ஓட முயன்ற...

இதுகுறித்து சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாரை தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஜாலஹள்ளி அருகே எச்.எம்.டி. லே-அவுட்டில் உள்ள தொழிற்பேட்டையில் ரவுடி திவாகர் பதுங்கி இருந்தார்.

அவரை கைது செய்ய, சஞ்சய்நகர் போலீஸ் இன்ஸபெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து அவர் தப்பி ஓட முயன்றார். அவரை, போலீஸ்காரர் பிரதீப் பிடிக்க முயன்றார்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

அந்த சந்தர்ப்பத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் போலீஸ்காரர் பிரதீப்பை தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பி ஓடுவதற்கும் திவாகர் முயன்றார். இதையடுத்து, வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சரண் அடைந்துவிடும்படி ரவுடி திவாகரை, பால்ராஜ் எச்சரித்தார். அவர் சரண் அடைய மறுத்ததுடன், அங்கிருந்து தப்பி ஓடவும் முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியால், ரவுடி திவாரை நோக்கி ஒரு முறை சுட்டார்.

இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே அவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தார்கள். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் திவாகர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

8 வழக்குகள் பதிவு

அப்போது ரவுடி திவாகர் மீது கொள்ளை, கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் கிரிநகர் போலீஸ் நிலையத்தில் திவாகரின் பெயர் ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.  கைதான திவாகர் மீது சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story