பவானிசாகரில் அட்டை பாரத்துடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது


பவானிசாகரில் அட்டை பாரத்துடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 31 Dec 2021 9:26 PM GMT (Updated: 31 Dec 2021 9:26 PM GMT)

பவானிசாகரில் அட்டை பாரத்துடன் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி தீப்பிடித்து எரிந்தது.

பவானிசாகர்
பவானிசாகரில் அட்டை பாரத்துடன் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி தீப்பிடித்து எரிந்தது. 
அட்டை பாரம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கு சொந்தமான மினி லாரியை ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மார்க்கெட் சதுக்கத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 38) என்பவர் வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த லாரியில் கடந்த 6 மாதங்களாக தினமும் மாலையில் ேகாவை மாவட்டம் காரமடையில் இருந்து அட்டை கோன் பாரம் ஏற்றிக்கொண்டு மறுநாள் காலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இறக்குவது வழக்கம். இரவு நேரத்தில் மினி லாரியை பவானிசாகர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடைக்கு முன்பு நிறுத்துவார்.
தீப்பிடித்து எரிந்தது
வழக்கம்போல், அவர் நேற்று முன்தினம் இரவு அட்டை கோன் பாரத்துடன் கடை முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு தூங்க சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மினி லாரியில் இருந்த அட்டை கோனில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் அட்டை கோன் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ லாரி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதை பார்த்த அந்த வழியாக சென்ற சிலர் உடனே சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான அட்டை கோன் எரிந்து நாசம் ஆனது. நிறுத்திவைக்கப்பட்ட மினி லாரி எப்படி தீப்பிடித்தது அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது தீ பற்ற வைத்தார்களா? என்பது குறித்து பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story