திருமுல்லைவாயல் அருகே பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துப்புரவு பெண் ஊழியர் பலி


திருமுல்லைவாயல் அருகே பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துப்புரவு பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 1 Jan 2022 12:14 AM GMT (Updated: 1 Jan 2022 12:14 AM GMT)

திருமுல்லைவாயல் அருகே பணியின் போது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி மாநகராட்சி துப்புரவு பெண் ஊழியர் பலியானார்.

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 42). இவர் ஆவடி மாநகராட்சியில் சுகாதார பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அவர் வழக்கம்போல் நேற்று காலை 8.30 மணிக்கு வேலைக்கு வந்தார். பின்னர் திருமுல்லைவாயல் பகுதியில் சாலையில் கிடக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக டிராக்டரில் டிரைவருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து சென்றுக்கொண்டிருந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவர் டிராக்டரை ஓட்டிச்சென்றுள்ளார்.

சாவு

அப்போது, திருமுல்லைவாயல் சோழம்பேடு சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வெண்ணிலா நிலைத்தடுமாறி டிராக்டரில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அப்போது இதைக்கவனிக்காத பிரகாஷ் டிராக்டரை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கீழே விழுந்த வெண்ணிலாவின் மீது டிராக்டரின் சக்கரம் ஏறி இறங்கியதில் வெண்ணிலா படுகாயமடைந்து மயங்கினார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெண்ணிலாவை மீட்டு, அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வெண்ணிலாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, விபத்துக்கு காரணமாக டிராக்டரை ஓட்டிச்சென்ற டிரைவர் பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பணியின் போது துப்புரவு பெண் தொழிலாளி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story