நீர் வரத்து அதிகரிப்பால் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மதகுகள் வழியாக உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் பாலாறு அணையிலிருந்து வந்து சேரும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், ஜமீன்கொரட்டூர் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரிநீரை மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடுவது வழக்கம்.
வடகிழக்கு பருவமழை காரணமாக பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழை முழுவதுமாக நின்று விட்டதால் கடந்த 27-ந்தேதி உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் பலத்த மழையால் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1,117 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 744 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 34.91 அடியாக பதிவாகியது. 3.114 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 820 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இதேபோல் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
Related Tags :
Next Story