புத்தாண்டு கொண்டாட்டத்தில் மெக்கானிக் குத்திக்கொலை
பேரணாம்பட்டு அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
மெக்கானிக்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கார்க்கூர்-கொத்த மாரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினீத் (வயது 23), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
புத்தாண்டையொட்டி ஊருக்கு வந்த வினீத் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தில் இளைஞர்கள், நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் அசோகன் (44), மகன் ஆகாஷ் (23) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
கொலை
உடனே வினீத்தின் அத்தை மலர் (36) அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். ஆனால் அவரை தகாத வார்த்தையால் அசோகன், ஆகாஷ் ஆகியோர் திட்டி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் மலர் தனது மகள் கண்ணகி, வினீத் மற்றும் உறவினர்களுடன் ஆகாஷ் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது ஆகாஷின் தந்தை அசோகன் ஆத்திரம் அடைந்து வினீத்தை சரமாரியாக தாக்கினார்.
அதே நேரத்தில் ஆகாஷ் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வினீத்தின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த வினீத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
வழக்குப்பதிவு
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் விரைந்து சென்று வினீத்தின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
வினீத்தை கொலை செய்த டிராக்டர் டிரைவர் அசோகன் (45), அவரது மகன் ஆகாஷ் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
=========
Related Tags :
Next Story