நள்ளிரவு கொண்டாட்டம் களை இழந்தது புத்தாண்டையொட்டி வழிபாட்டு தலங்களில் மக்கள் குவிந்தனர்


நள்ளிரவு கொண்டாட்டம் களை இழந்தது புத்தாண்டையொட்டி வழிபாட்டு தலங்களில் மக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 1 Jan 2022 6:53 PM IST (Updated: 1 Jan 2022 6:53 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டையொட்டி வழிபாட்டு தலங்களில் மக்கள் குவிந்தனர். போலீஸ் எச்சரிக்கை எதிரொலியாக நள்ளிரவு கொண்டாட்டம் களை இழந்தது.

தேனி:
2021-ம் ஆண்டு நேற்று முன்தினம் நள்ளிரவோடு விடைபெற்றது. நள்ளிரவில் 2022-ம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் கூட்டமாக கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. 
அதன்படி தேனி மாவட்டத்தில் கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களிலும், பொது இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த கலெக்டர் முரளிதரன் தடை விதித்தார். மேலும் சாலைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே எச்சரிக்கை விடுத்தார்.
வெறிச்சோடிய சாலைகள்
இதையடுத்து தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டத்தில் 93 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 950 போலீசார் புத்தாண்டு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் கெடுபிடி காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. நள்ளிரவில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக இளைஞர்கள் பலரும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் சாலைகள், தெருக்களில் கூச்சல் போட்டபடி நள்ளிரவில் உலா வருவார்கள். ஆனால், நேற்று தேனியில் அதுபோன்ற எந்த வீதி உலாவும் நடக்கவில்லை. இதனால் நள்ளிரவு கொண்டாட்டம் களை இழந்தது.
போலீசார் கொண்டாட்டம்
இதனிடையே ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் நள்ளிரவில் ‘கேக்’ வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். இதற்கு தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர் தலைமை தாங்கி ‘கேக்’ வெட்டி போலீசாருக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
தேவாலயங்கள்
கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தேனி ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம், தேனி என்.ஆர்.டி. நகர் சி.எஸ்.ஐ. புனித பவுல் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. என்.ஆர்.டி. நகர் சி.எஸ்.ஐ. புனித பவுல் கிறிஸ்தவ ஆலயத்தில் சபை குரு ஜேக்கப் வின்சிலின் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். 
இதுபோல் தேனி கணேச கந்தபெருமாள் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பெத்தாட்சி விநாயகர் கோவில், போடி பெருமாள் கோவில், சுப்பிரமணியசாமி கோவில், பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்ப ச3ாமி கோவில், பிச்சாங்கரை கீழசொக்கநாதர் கோவில், மேலச்சொக்கநாத புரம் தொட்டராயர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. 
பெரியகுளம்-கம்பம்
பெரியகுளத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் பெரியகுளம் தென்கரை பாலசுப்ரமணிய சாமி கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கம்பத்தில் சி.எஸ்.ஐ. தேவாலயம், கே.கே.பட்டி ரோட்டில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கம்பம் வேலப்பர் கோவில், ராஜகணபதி கோவில், கம்பராயபெருமாள் கோவில், வேலப்பர் கோவில், ஆதிசக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 
கூடலூர் லோயர்கேம்பில் உள்ள வழிவிடும் முருகன் கோவிலில் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அருகில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் நினைவு மணிமண்டபத்தை கண்டுரசித்தனர். 
இதுபோல மாவட்டம் முழுவதும் தேவாலயங்கள், இந்து கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story