வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 1 Jan 2022 10:13 PM IST (Updated: 1 Jan 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

வேளாங்கண்ணி:
ஆங்கில புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு திருப்பலி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பேராலயத்தின் அருகில் உள்ள சேவியர் மாநாட்டு பந்தலில் நன்றி அறிவிப்பு வழிபாடு நடந்தது. இதனைத்தொடர்ந்து பாதிரியார்களின் திருப்பலி ஆயத்த பவனி நடந்தது. 
வாண வேடிக்கை
பின்னர் 12 மணிக்கு தஞ்ைச மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ் ஆகியோர் மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி ஆங்கில புத்தாண்டு பிறப்பை அறிவித்தார்கள். அப்போது வாண வேடிக்கைகள் நடந்தது. 
இதையடுத்து மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் பேராலய பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ், உதவிப் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
மின்விளக்கு அலங்காரம்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முககவசம் அணிந்து வர வேண்டும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பேராலயம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடந்தது.
புத்தாண்டையொட்டி பேராலயம் அருகில் தியான மண்டபம் செல்லும் சாலை, விண்மீன் ஆலயம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
போலீசார் பாதுகாப்பு
ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் வேளாங்கண்ணி கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடற்கரைக்கு செல்லும் பாதைகளை இரும்பு தடுப்பு வைத்து அடைத்து வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story