பச்சை மரகத லிங்கத்தை திருக்குவளை கோவிலில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்


பச்சை மரகத லிங்கத்தை திருக்குவளை கோவிலில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Jan 2022 11:09 PM IST (Updated: 1 Jan 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மீட்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை திருக்குவளை கோவிலில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை:
தஞ்சையில் மீட்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை மரகத லிங்கத்தை திருக்குவளை கோவிலில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 பச்சை மரகத லிங்கங்கள் 
முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க ஸ்தல லிங்கங்கள் எனப்படும் 7 பச்சை மரகத லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. 
கடந்த 2016-ம் ஆண்டு திருக்குவளையில் வைத்து பூஜிக்கப்பட்ட பச்சை மரகதலிங்கம் திருட்டுப்போனது. இதன் மதிப்பு பலகோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
தஞ்சையில் மீட்பு
இதுகுறித்து சிலை தடுப்பு போலீசார் விசாரணை செய்து வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், தஞ்சை அருளானந்த நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவரின் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் தனிப்படையினர் நேற்று முன்தினம் தஞ்சை வந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள சாமியப்பன் என்பவர் வீட்டுக்கு சென்றனர். அங்கு இருந்த சாமியப்பனின் மகன் அருணபாஸ்கரிடம் தொன்மையாக கோவில் சிலைகள் ஏதேனும் உங்கள் வீட்டில் உள்ளதா? என்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், தனது தந்தையிடம் தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும் அதை அவர் வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பச்சை மரகத லிங்கத்தை போலீசார் மீட்டனர். பின்னர் இந்த லிங்கம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் தஞ்சையில் மீட்கப்பட்ட பச்சை மரகத லிங்கம் நாகை மாவட்டம் திருக்குவளை கோளிலிநாதர் கோவிலில் இருந்து திருடப்பட்ட பச்சை மரகதலிங்கம் என்று தெரிய வந்தது. பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த பச்சை மரகதலிங்கம் ‘அவனிவிடங்கர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஒப்பிட்டு பார்த்து  உறுதி செய்தனர்
இந்த நிலையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கூடுதல் சூப்பிரண்டுகள் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோர் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றனர். அங்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்தனர். 
அப்போது போலீசார் தாங்கள் கொண்டு வந்திருந்த பச்சை மரகதலிங்கத்தின் புகைப்படத்தை, தருமபுரம் ஆதீன மடத்தில் இருந்து காணாமல் போன பச்சை மரகதலிங்கத்தின் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்து கொண்டனர்.
மீண்டும் ஒப்படைக்க ஆதீனம் வேண்டுகோள்
அப்போது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை தியாகராஜர் கோவிலில் இருந்து திருடப்பட்ட  பச்சை மரகதலிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த மரகத லிங்கத்தை தங்களிடம்(ஆதீனம்) ஒப்படைத்து நித்திய பூஜைக்கு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story