அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 1 Jan 2022 11:18 PM IST (Updated: 1 Jan 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆங்கில புத்தாண்டு

2022 ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. 

புத்தாண்டை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டனர். 

பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து ‘கேக்’ வெட்டி கொண்டாடினர். 

இரவில் புத்தாண்டு கொண்டாட்டமாக தேவையின்றி மோட்டார் சைக்கிளில் வலம் வருபவர்களை கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நேற்று அதிகாலை முதலே பொதுமக்கள், பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீராடி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிமாவட்ட பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவு வருகை தந்தனர்.

கோவிலில் பக்தர்கள் பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரம் செய்யப்பட்டது. சம்பந்த விநாயகருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை ஏராளமான பக்தர்கள் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். 

பக்தர்கள் வசதிக்காக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story