குமாரபாளையத்தில் என்ஜினீயர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை-சாவில் சந்தேகம் என பெற்றோர் புகார்


குமாரபாளையத்தில் என்ஜினீயர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை-சாவில் சந்தேகம் என பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 1 Jan 2022 11:21 PM IST (Updated: 1 Jan 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் என்ஜினீயர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

குமாரபாளையம்:
என்ஜினீயர் மனைவி
குமாரபாளையம் காலனி ஆஸ்பத்திரி வீதியில் வசித்து வருபவர் சவுந்தரராஜன் (வயது 35). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த பூங்கொடி என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகளும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சவுந்தரராஜன் தற்போது வீட்டில் இருந்தவாறு வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் சவுந்தரராஜன் வெளியே சென்று விட்டார். மதியம் 1 மணிக்கு அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர், பவானியில் உள்ள பூங்கொடியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
சாவில் சந்தேகம்
அதன்பேரில் அவர்கள் குமாரபாளையத்துக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பூங்கொடி புடவையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பூங்கொடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் பூங்கொடியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story