புதுக்கோட்டை அருகே சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு போலீசார் விசாரணை தீவிரம்


புதுக்கோட்டை அருகே சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு போலீசார் விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 1 Jan 2022 11:43 PM IST (Updated: 1 Jan 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை:
சிறுவனுக்கு தொடர் சிகிச்சை
புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சம்பவத்தன்று திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்து வெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் குடிசை வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுவன் புகழேந்தி (வயது11) தலையில் பாய்ந்தது. 
இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவனின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
குண்டு ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பூர் ஆர்.டி.ஓ. நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டார். இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. 
இதில் 18 பேர் ஈடுபட்ட நிலையில் 4 பேர் அந்த நேரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுவன் தலையில் குண்டு பாய்ந்தது எப்படி? என்பது பலவிதமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதற்கிடையில் சிறுவன் தலையில் இருந்து அகற்றப்பட்ட குண்டு சென்னையில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தீவிர விசாரணை
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘துப்பாக்கி குண்டு எந்த ரகம், அதனை சுட்டது யார்? அந்த குண்டு இவ்வளவு தூரம் கடந்து சென்று சிறுவன் தலையில் பாய்ந்தது எப்படி? என்பதனை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறுவன் தலையில் இருந்த குண்டு விவரம் தெரிந்தால் தான் அதனை பயன்படுத்தியது யார்? அதனை சுட்டது யார்? என்பது தெரியவரும். 
இதற்காக ‘பேலஸ்டிக்’ என அழைக்கப்படும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ‘பேலஸ்டிக்’ என்பது துப்பாக்கி குண்டுகளின் தரத்தை துல்லியமாக ஆய்வு செய்து அறிவிப்பார்கள். அதாவது ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தும் போது வகையாக பிரித்து தெரிவிக்கப்படுவது போல தெரிவிப்பார்கள். அந்த குண்டு எந்த ரகம், எந்த துப்பாக்கியில் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கு என்பது ஆய்வில் தெரியவரும். அதனை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்ட மத்திய மண்டலத்தை சேர்ந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

Next Story